'டொய்லெட் சீட்டைவிட அலுவலக கணினி மௌஸில் அதிக கிருமிகள்'
06-04-2012 11:34 AM
Comments - 0       Views - 2562
கழிப்பறைகளிலுள்ள டொய்லட் சீட்களில் உள்ளதைவிட சராசரி கணினி மௌஸ்களில் மூன்று மடங்கு அதிகளவான கிருமிகள் காணப்படுவதாக புதிய ஆய்வறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது அலுவலக மேசையிலேயே உணவு உண்ணும் ஊழியர்கள், தமது கணினிகளை கேடு விளைவிக்கக் கூடிய அசுத்த கிருமிகள் பெருகுவதற்கான இடமாக மாற்றிவிடுகிறார்கள் என ஆய்வாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பெண்களை விட ஆண்களே அதிகமாக அசுத்தம் நிறைந்தவர்களாக காணப்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.  ஆண்கள் பயன்படுத்தும் மௌஸ்களிலே 40 வீதம் அதிக பக்ரீறியாக்கள் காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வின்படி, அலுவலகங்களில் மௌஸ்களுக்கு அடுத்ததாக அதிக கிருமிகள் நிறைந்த பொருளாக கணினி விசைப்பலகை (கீ போர்ட்) காணப்படுகிறது.  அதற்கடுத்தாக தொலைபேசிகள் மற்றும் நாற்காலிகள்  அதிக கிருமிகள் கொண்டவையாக உள்ளன.

கழிப்பறையில் தண்ணீர் பாய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் தாங்கியின் கைப்பிடியை விட கணினி மௌஸ்களில் இரு மடங்கு பக்றீரியாக்கள் காணப்படுவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வாளர்கள், 3 அலுவலக இடங்களிலுள்ள 40 மேசைகளிலிருந்து கைப்பற்றப்பட்ட 158 பொருட்களையும் 28 டொய்லெட் சீட்கள் உட்பட கழிப்பறை பொருட்களை ஆய்வுக்குப் பயன்படுத்தினர்.

தொழில்நுட்ப முகாமையாளரான பீட்டர் பாரட் இது குறித்து தெரிவிக்கையில்,  'தற்போது அலுவலகங்களில் தொழில்புரிபவர்கள் மதிய நேர உணவை அவர்கள் பணியாற்றும் மேசையிலேயே வைத்து உண்பதுடன் உணவு உண்ணும் நேரத்தில் இணையத்தை பார்வையிடுவது அல்லது தொடர்ந்து ரைப் செய்வதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளனர்.

இதனால் உணவுத் துகள்கள் கணினிகளில் குறிப்பாக, மௌஸ்கள் மற்றும் விசைப்பலகை மீது படிந்துவிடுகின்றன. இதன் மூலம் அப்பொருட்கள்  பக்ரீறியாக்களும் ஏனைய நுண்ணுயிர்களும் பெருகுவதற்கு ஏற்ற இடமாக மாறிவிடுகின்றன.

ஏனெனில் இவை இலத்திரனியல் பொருட்கள் ஆகையால் அடிக்கடி தூய்மையாக்கப்படுவதில்லை' எனத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, டொய்லெட் சீட்டைவிட அதிக கிருமி கொண்ட பொருள் அலுவலக கணினி மௌஸ் மாத்திரம் அல்ல என்பது மேற்படி ஆய்வில் தெரியவந்துள்ளது.

சமையலறை தரை, வாகனங்களின் ஸ்ரீயரிங், உணவகங்களின் கதிரகைள், ஷொப்பிங் ட்ரோலிகள் என்பனவற்றிலும் அதிக கிருமிகள் காணப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"'டொய்லெட் சீட்டைவிட அலுவலக கணினி மௌஸில் அதிக கிருமிகள்'" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty