கூகிள் ட்ரைவ் உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பு
25-04-2012 04:00 PM
Comments - 0       Views - 1407

கூகிள் நிறுவனத்தின் கூகிள் ட்ரைவ் என்ற புதிய சேவையை கூகிள் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இன்று அதன் உத்தியோகபூர்வ அறிப்பில் 5 ஜி.பி கொள்ளவுள்ள கூகிள் ட்ரைவ் சேவை அனைத்து கூகிள் பாவனையாளர்களுக்கும் கிடைக்கப்பெறும் என கூகிள் அறிவித்துள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் ஏற்கனவே கூகிளின் சேவையான கூகிள் டொக்ஸ் என அழைக்கப்படும் கூகிள் டொக்குயூமென்ட்ஸ் சேவையுடன் இணைப்பட்டதாக இந்த சேவை வழங்கப்படும் எனவும், நீங்கள் தரவேற்றும் கோப்புக்களை உலகில் எங்கிருந்தும் பார்வையிடலாம் எனவும், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூகிள் ட்ரைவ் சேவையில் பி.டி.எஃவ் கோப்புக்கள், புகைப்படங்கள், வீடியோக் காட்சிகள் உட்பட ஏராளமான கோப்புக்களைச் சேமித்து பகிர்ந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. நீங்கள் பகிர்ந்து கொள்ளும் கோப்புக்களில் உங்கள் நண்பர்கள் அல்லது ஏனையோர் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தால், அதை உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

உங்களுக்கான கூகிள் ட்ரைவ் வசதி செயற்படுத்தப்பட்டவுடன், கூகிள் ட்ரைவிற்கான மென்பொருளைத் தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொண்டதும் கூகிள் ட்ரைவைப் பயன்படுத்த நீங்கள் ஆரம்பிக்கலாம். கூகிள் ட்ரைவிற்கான மென்பொருள் தற்போதைக்கு வின்டோஸ், அப்பிள் கணினிகள், அன்ட்ரொய்ட் தொலைபேசிகள் மற்றும் அன்ட்ரொய்ட் டப்ளெட் கணினிகள் (Tablets) ஆகியவற்றிற்குக் கிடைக்கப் பெறுகிறது. ஐபோன்கள் மற்றும் ஐபாட்களுக்கான மென்பொருள் விரைவில் கிடைக்கப்பெறும் எனவும் கூகிள் அறிவித்துள்ளது.

கூகிள் ட்ரைவிற்கான மென்பொருளை கணினியில் நிறுவிக்கொண்டதும் அம்மென்பொருள் உங்கள் கணினியில் கூகிள் ட்ரைவிற்கான அடைவொன்றை (ஃபோல்டர்) உருவாக்கும். நீங்கள் பகிர விரும்பும் கோப்புக்களை அந்த அடைவில் நீங்கள் பதிந்தால், அக்கோப்புக்கள் பகிரக்கூடிய வடிவில் உங்கள் கூகிள் ட்ரைவ் கணக்கில் சேர்க்கப்படும். அத்தோடு கூகிள் ட்ரைவ் "ஓசிஆர்" என அழைக்கப்படும் புகைப்படங்களிலிருந்து எழுத்துக்களைப் பிரிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளதால், ஸ்கான் செய்யப்பட்ட ஆவணங்களைப் பகிரும் போது அதில் காணப்படும் எழுத்துக்களைப் பிரித்து அந்த ஆவணத்தில் எழுத்துக்களைத் தேடும் வசதியும் காணப்படுகின்றது.

ஆரம்பத்தில் அனைவருக்கும் 5 ஜிகா பைட் கொள்ளளவு இலவசமாக வழங்கப்படவுள்ளது. மேலதிக சேமிப்பளவு தேவைப்படுபவர்கள் 25 ஜிகா பைட் சேமிப்பளவை மாதமொன்றிற்கு 2.49 ஐக்கிய அமெரிக்க டொலர்களைச் செலுத்தியும், 100 ஜிகா பைட் தேவைப்படுபவர்கள் 4.99 ஐக்கிய அமெரிக்க டொலர்களை மாதமொன்றிற்கு செலுத்தியும், 1 ரெறா பைட் தேவைப்படுபவர்கள் மாதமொன்றிற்கு 49.99 ஐக்கிய அமெரிக்க டொலர்களை மாதமொன்றிற்கு செலுத்தியும் இவ்வசதியைப் பெற்றுக் கொள்ளலாம். (க்ரிஷ்)
"கூகிள் ட்ரைவ் உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty