தந்தை என்னைக் கொடுமைப்படுத்துகிறார்: இந்திய கிரிக்கெட்சபைத் தலைவரின் மகன்
21-05-2012 05:57 PM
Comments - 0       Views - 1012
தனது தந்தை தன்னை உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் கொடுமைப்படுத்துவதாக இந்தியக் கிரிக்கெட்சபைத் தலைவர் என்.ஸ்ரீனிவாசனின் மகன் அஸ்வின் தெரிவித்துள்ளார். தான் சமபால் உறவாளன் (ஓரினச் சேர்க்கையாளன்) என்ற காரணத்தினாலேயே தன்னை அவர் கொடுமைப்படுத்துவதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.

தானும், தனது துணையான அவி முகர்ஜியும் தந்தையின் கொடுமைப்படுத்தல்களுக்கு வருடக்கணக்காக உள்ளாகி வருவதாகத் தெரிவித்துள்ள அஸ்வின், இறுதியாக கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி காவல்துறையினரால் இருவரும் கைதுசெய்யப்பட்டு இரும்புக் கோல்களால் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

43 வயதான அஸ்வின், தனது தந்தை சமபாலுறவுக்கு எதிரானவர் எனவும், 1998ஆம் ஆண்டு தான் சமபாலுறவாளன் என்பதை பெற்றோருக்கு வெளிப்படுத்தியதிலிருந்து தன்னை மாற்றமடையுமாறு தொடர்ந்தும் வற்புறுத்தி வருவதாகவும் தெரிவித்தார். 1999ஆம் ஆண்டு அவி முகர்ஜியுடன் தான் காதலில் விழுந்ததாகத் தெரிவித்த அவர், அதன் பின்னர் இருவரும் தந்தையின் உடல், உளக் கொடுமைகளுக்கு உள்ளாகி வருவதாகத் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி மது அருந்தும் இடத்திற்குச் சென்ற இருவரும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய 28,000 இந்திய ரூபாய்களைக் கொடுக்க மறுத்ததாகத் தெரிவிக்கும் காவல்துறையினர், மது வழங்க அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குப் பின்னர் மது வழங்க மறுத்த அம்மதுபானசாலையின் ஊழியர்களோடு இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனினும் காவல்துறையினரின் விளக்கத்தை முழுமையாக மறுக்கும் அஸ்வின், தாங்கள் இரும்புக் கோல்களைக் கொண்டு கடுமையாகத் தாக்கப்பட்டதாகத் தெரிவிப்பதோடு, அது தொடர்பான புகைப்படங்களையும் வெளிப்படுத்தியுள்ளனர். தற்போது காவல்துறையினருக்கும் தந்தைக்கும் பயந்து இருவரும் ஒழித்து வாழ்கின்றனர்.

இதற்கு முன்னரும் 2002ஆம் ஆண்டு என்.ஸ்ரீனிவாசனின் கோரிக்கையின் பேரில் இருவரும் இருட்டு அறைக்குள் வைத்துத் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கும் ஆண் சமபாலுறவாளர்களின் உரிமைக்காக போராடும் அஷோக் ரோ கவி, தந்தையிடமிருந்து அஸ்வினையும்,அவரது துணையையும் காப்பாற்ற அவர்கள் வெளிநாடு செல்வதற்குத் தான் துணை புரிந்ததாகவும் தெரிவித்தார்.

மேற்படி குற்றச்சாட்டுக்கள் குறித்துக் கருத்துத் தெரிவிக்க மறுத்த என்.ஸ்ரீனிவாசன், இது தனது குடும்ப விடயம் எனவும், அது குறித்துப் பகிரங்கமாகக் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார். (க்ரிஷ்)
"தந்தை என்னைக் கொடுமைப்படுத்துகிறார்: இந்திய கிரிக்கெட்சபைத் தலைவரின் மகன்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty