சென்ரல் இன்டஸ்ரிஸ் தனது புதிய தொழிற்சாலையை யக்கலையில் நிறுவுகிறது
30-08-2012 02:12 PM
Comments - 0       Views - 237

நஷனல் PVC குழாய் வகைகள் மற்றும் பொருத்திகள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சென்ரல் இன்டஸ்ரிஸ் நிறுவனம், தனது புதிய நவீனமயமான தொழிற்சாலையை யக்கல பகுதியில் நிறுவுவதற்கான அடிக்கல்லை நாட்டியுள்ளது. இந்நிகழ்வு அண்மையில் வைபவ ரீதியில் இடம்பெற்றிருந்தது. இந்த தொழிற்சாலை நிறுவப்படுவதன் மூலம் அதிகரித்துச் செல்லும் நஷனல் PVC குழாய் வகைகள் மற்றும் கிரிப்டன் சுவிச் மற்றும் உதிரிப்பாக வகைகளுக்கான கேள்வியை நிவர்த்தி செய்ய முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று கட்டங்களாக இந்த தொழிற்சாலை நிறுவப்படவுள்ளது. இதில் முதல் கட்டம் இவ்வருட டிசெம்பர் மாதமளவில் பூர்த்தி செய்யப்பட்டு, உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கெரவலபிட்டிய பகுதியில் அமைந்துள்ள நிறுவனத்தின் தற்போதைய தொழிற்சாலைக்கு பக்கபலமாக இந்த புதிய தொழிற்சாலை அமையவுள்ளது.

சென்ரல் இன்டஸ்ரிஸ் நிறுவனம் தனது வர்த்தக நடவடிக்கைகளை 1985ஆம் ஆண்டு ஆரம்பித்திருந்தது. அக்காலப்பகுதியில் இலங்கை தரநிர்ணயங்களுக்கு அமைவாக (SLS) PVC குழாய்களையும் பொருத்திகளையும் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த ஒரே நிறுவனம் எனும் பெருமையை தன்னகத்தே கொண்டிருந்தது. இதர நிறுவனங்கள் ஜப்பானிய தொழில்நுட்பத்தை பின்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், நஷனல் PVC குழாய்கள் மற்றும் பொருத்திகளுக்கு ISO 9001 சான்று முதன் முதலாக வழங்கப்பட்டிருந்தமையும் விசேட அம்சமாகும். சென்ரல் இன்டஸ்ரிஸ் நிறுவனம் காலப்போக்கில் தமது தயாரிப்புகளை PVC குழாய்கள் மற்றும் பொருத்திகளிலிருந்து சுவிச் மற்றும் உதிரிப்பாக வகைகளுக்கு விஸ்தரித்திருந்தது. கிரிப்டன் எனும் வர்த்தக நாமத்தின் கீழ் இலங்கையிலிருந்து தயாரிக்கப்படும் சுவிச் வகைகள், சுற்று முறிப்பான்கள், தடக்குச்சுற்று சுவிச்கள் மற்றும் பிரதான சுவிச் வகைகள் மக்கள் மத்தியில் அதிகளவு வரவேற்பை பெற்றுள்ளன.

சென்ரல் இன்டஸ்ரிஸ் பிஎல்சி நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நியுடன் விக்ரமசூரிய கருத்து தெரிவிக்கையில், 'எமது நிறுவனம் தாபிக்கப்பட்டதிலிருந்து, நாம் உயர்தரத்தை பேணுவது குறித்து அதிக கவனம் செலுத்தி வருகிறோம். சிறப்புத் தேர்ச்சி பெற்ற தர மேற்பார்வை குழுவினரால் அதிசிறந்த நவீன ஆய்வுகூட மேற்பார்வைகளுக்கு அமைவாக உயர்தரம் வாய்ந்த எமது தயாரிப்புகள் தயாரிக்கப்படுகின்றன. அத்துடன் ஒவ்வொரு தயாரிப்பும் சந்தையில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்படும் முன்னர், முறையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே விடப்படுகிறது. எமது தயாரிப்புகளின் உயர்தரம் எம்மை இந்த துறையில் சிறந்த நிலையில் காணப்படுவதற்கு அடிப்படை காரணியாக அமைந்துள்ளது. எமது தயாரிப்புகளுக்கான கேள்வி அதிகரித்துச் செல்லும் நிலையில் நாம் எமது விஸ்தரிப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த புதிய தொழிற்சாலையை நிறுவுவதற்கான அடிக்கல்லை தற்போது நாட்டியுள்ளோம்' என்றார்.

நஷனல் PVC மற்றும் கிரிப்டன் வர்த்தக நாமங்களின் உரிமையாளராக திகழும் சென்ரல் இன்டஸ்ரிஸ் நிறுவனம், ஜப்பான் நாட்டின் ஹிடாச்சி பவர் டூல்ஸ் மற்றும் ஜேர்மனியின் FRISCHHUT DI பொருத்திகளின் தயாரிப்புகளுக்கு ஏக விநியோகத்தராக இலங்கையில் திகழ்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. 27 வருடகால வர்த்தக நடவடிக்கையில், இலங்கையில் சென்ரல் இன்டஸ்ரிஸ் நிறுவனம் ISO 9001, SLS 147, SLS 659, SLS 935, SLS 948 மற்றும் SLS 1000 ஆகிய சான்றுகளை பெற்றுள்ளது. சென்ரல் இன்டஸ்ரிஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் என்பதுடன், சென்ரல் பினான்ஸ் பிஎல்சியின் அங்கத்துவ நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
"சென்ரல் இன்டஸ்ரிஸ் தனது புதிய தொழிற்சாலையை யக்கலையில் நிறுவுகிறது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty