வியாழக்கிழமை, 24 மே 2012

'இடம்பெயர்ந்தோர் முகாம்களிலிருந்து 17 பேர் பல்கலைக்கு தெரிவாகியுள்ளனர்'

 

(றிப்தி அலி)

உள்நாட்டில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருந்து படித்த மாணவர்களில் 17 பேர் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளாக மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன் தெரிவித்தார்.

கடந்த இரண்டு வருடங்களுக்குள் நடைபெற்ற கல்வி பொதுத் தராதர (உயர் தர) பரீட்சைகளில் தோற்றி இவர்கள் சித்தியடைந்துள்ளனர் எனவும் இந்த மாணவர்களில் ஒருவர் மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யுத்தத்தினால் முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா, மெனிக் பாக் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 207 குடும்பங்கள், புதுக்குடியிருப்பு, கோம்பாவில் பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மீள்குடியேற்றப்பட்டனர்.

இந்த மீள்குடியேற்ற நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ண வீரகோன், மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பந்துசேன மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் என்.வேதநாயகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் குணரட்ன வீரகோன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



அங்கு தொடர்ந்து உரையாற்றி அவர்,

"இந்த பிரதேசத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களை ஒருபோதும் அரசாங்கம் கைவிடமாட்டாது. இந்த மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் வழங்கும்.

இதன் ஒரு கட்டமாகவே இன்று மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 40 பேர்ச் காணிக்கு மேலாக இன்னும் 40 பேர்ச் காணி மேலதிகமாக வழங்கப்படவுள்ளது.

பாடசாலை, போக்குவரத்து, மின்சாரம் மற்றும் வீதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை ஒருபோதும் உடனடியாக மேற்கொள்ள முடியாது. இந்த உட்கட்டமைப்பு வசதிகள் கட்டம் கட்டமாகவே மேற்கொள்ளப்படும்.

நானும் முகாமில் வசித்துள்ளேன். இதன் காரணமாக முகாமில் வாழும் மக்களின் பிரச்சினை எனக்கு தெரியும். இதனால் நான் மீள்குடியேற்ற அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் 18 தடவை உள்நாட்டில் இடம்பெயர்ந்து பொதுமக்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளேன்.  

இதனாலேயே முகாம்களில் தங்கியிருந்த மக்களை தற்போது சொந்த இடங்களில்  மீள்குடியேற்றியுள்ளோம். வடக்கு மற்றும் தெற்கு மக்கள் இணைவதன் மூலமே நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். இதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்" என்றார்.

இங்கு உரையாற்றிய மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்,



"அடுத்த இரண்டு வருடங்களுக்கு முல்லைத்தீவு மாவட்டம் முழுவதும் மின்சாரம் வழங்கப்படும்.  அதுவரை இங்குள்ள மக்கள் பொறுமையாகவே இருக்க வேண்டும்.

30 வருடம் இடம்பெற்ற யுத்ததினால் பாதிக்கப்பட்ட பிரதேசமான முல்லைத்தீவினை  ஒரு நாளைக்குள் மீளக்கட்டியொழுப்ப முடியாது. இதற்கு பல வருடங்கள் தேவைப்படும். பொறுமையாக இருந்தால் மாத்திரமே அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை பெற முடியும்.

9முல்லைத்தீவு மாவட்டத்தில் உட்கட்டமைப்பு உள்ளிட்ட அபிவிருத்தி செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றமையினால் முல்லைத்தீவு மாவட்டம் அடுத்த 2 வருடத்திற்குள் புதுமையானதாக மாற்றமடையும்.

அரசாங்கத்தினால் இந்த மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயற்பாடுகளை குழப்புவதற்காக சிலர் உங்களிடம் வந்து பொய் பிரசாரங்களை மேற்கொள்வர். இதனை ஒரு போது நம்ப கூடாது" என்றார். படங்கள்:றிப்தி அலி

Views: 828

Comments   

 
0#ram2012-02-09 23:50
அவர்களின் பறிக்கப்பட்ட காணியின் அளவு எவ்வளவு ? 4 அல்லது 5 ஏக்கர் . ஏன் அவர்களை சொந்த இடத்தில குடியமர்தாமல் வேறு இடத்தில் சிறு இட வசதியுடன் குடிபெயர செய்ய வேண்டும்.
Reply
 

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.