மற்றுமொரு வேலுபிள்ளையின் மகன் போராட வரமுன் தமிழர்க்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும்: யோகேஸ்வரன் எம்.பி
21-05-2012 06:31 PM
Comments - 0       Views - 305

(எம்.சுக்ரி)


'மற்றுமொரு வேலுப்பிள்ளையின் மகன் தமிழர்களுக்காக போராட வருவதற்கிடையில் தமிழர்களுக்கான உரிமைகளை வழங்க ஜனாதிபதியும் அரசாங்கமும் முன் வரவேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

தந்தை செல்வாவின் 35ஆவது நினைவு தின வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை, மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்ற போது அங்கு உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் மேற்கண்டவாறு கூறினார்.

மட்டக்களப்பு இராஜதுரை நற்பணி மண்றத்தின் எற்பாட்டில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய அவர், 'இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமிழ் தேசியத்திற்காக இரண்டு வேலுப்பிள்ளையின் மக்கள் போராட்டத்தை நடத்தினர்.

தமிழர்களின் வரலாற்றில் 30 வருடங்கள் அகிம்சைப் போராட்டத்தை ஒரு வேலுப்பிள்ளையின் மகனான தந்தை செல்வாவும், மற்றைய 30 வருட ஆயுதப் போராட்டத்தை மற்றுமொரு வேலுப்பிள்ளையின் மகனுமே நடத்தினர்.

இந்நிலையில் இன்னுமொரு வேலுப்பிள்ளையின் மகன் வருவதற்கிடையில் அரசாங்கமும் ஜனாதிபதியும் தமிழ்களுக்கான அரசியல் தீர்வை வழங்கி உரிமைகளை கொடுத்து தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும்.

தந்தை செல்வா தமிழ் மக்களுக்காக வழங்கிய வீட்டை சிலர் மறைத்தார்கள். ஆனால் அந்த வீடுதான் தற்போது தமிழர்களுக்கு விமோசனத்தை ஏற்படுத்தி நிற்கின்றது. இன்னும் அந்த வீட்டை வேலி போட்டு மறைப்பதற்கு சிலர் முயன்று வருகின்றனர். அதற்கு நாம் ஒரு போதும் விடமாட்டோம்.

தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும் தமிழ் மக்களின் தேசியத்திற்காகவும் அகிம்சை வழிப் போராட்டம் நடத்திய தந்தை செல்வாவின் வழியில் நாம் இன்று பயணித்துக்கொண்டிருக்கின்றோம்' என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா கூறியதாவது,

'தந்தை செல்வா ஒரு தீர்க்க தரிசி இன்று நடப்பதை அன்றே சொல்லி வைத்தார். தமிழர்களின் பாரம்பரிய பிரதேசம் பறிபோகப் போகிறது என்பதை உணர்ந்த தந்தை செல்வா அன்று அரசாங்கத்துடன் பேசினார். அதற்காக சாத்வீக ரீதியான போராட்டத்தை நடத்தினர்.

இன்று தமிழ் மக்களின் 25000 ஏக்கர் காணிகள் வேலையில்லா ஊர்காவற்படை வீரர்களுக்கு அரசாங்கம் பயிர்ச்செய்கைக்காக வழங்கியுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட காணிகளை கிழக்கு மாகாண சபை பாதுகாப்பதற்காக அவர்களுக்கு வேலி போட்டு கொடுத்துள்ளது என்பதை நான் இங்கு வேதனையுடன் சுட்டிக்காட்டுகின்றேன்.

தமிழர்களுக்கு சொந்தமான காணியினை சிங்கள ஊர்காவற் படைக்கு வழங்கிய போது அதை கிழக்கு மாகாண சபை பாதுகாப்பதற்காக வேலி போட்டு போட்டு வழங்கியுள்ளதை நினைக்கும் போது வேதனையாக உள்ளது.

தமிழ் மக்களுக்காக செய்யப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களும் அமுல்படுத்தப்படாமல் கிடப்பிலேயே கிடந்து வந்துள்ளன. பண்டா செல்வா ஒப்பந்தம் நடைபெற்ற போது 200 பௌத்த பிக்குகள் அணி திரண்டு இந்த ஒப்பந்தத்தை கிழத்தெறிய வேண்டுமென பாதை யாத்திரை நடத்தி அதை கிழித்தெறிய வைத்தார்கள்.

1965ஆம் ஆண்டு டட்லி ஒப்பந்தம் அதிலும் எதுவும் நடக்கவில்லை. 13ஆவது சரத்தும் நிறைவேற்ற முடியாமல் போனது. முனசிங்க அறிக்கை அதுவும் நடக்கவில்லை. திஸ்ஸ விதாரணவின் சர்வ கட்சி மாநாடு அதுவும் கிடப்பில்தான் உள்ளது.

இவ்வாறு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தங்கள் எல்லாம் கிடப்பில்தான் உள்ளன. இன்று தெரிவுக்குழுவில் விமல் விரவன்ச மற்றம் ஹெலய உருமய அங்கம் வகிப்பது தமிழ் மக்களுக்கு விமோசனத்தை தராது. தெரிவுக்குழுவுக்கு நாம் செல்வதற்கு முன்னர் நாம் ஒப்பந்தமொன்றை செய்து கொள்ள வேண்டும்' என அவர் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன்,

'அகிம்சைப் போராட்டம் ஆயுதப் போராட்டம் இவ்விரண்டையும் பிரித்துப்பாக்க தேவையில்லை. அன்று தந்தை செல்வாவின் வேண்டுகோளிலேயே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கினார்கள் அதன் மூலம் 36 இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும் ஒரு இயக்கம் மாத்திரம் களத்தில் நின்று முள்ளிவாய்க்கால் வரை போராடியது.

அதனால் தந்தை செல்வாவை நினைவு கூறும் அதே நேரம் முல்லிவாய்க்காலில் உயிர் நீத்த அந்த இளைஞர்களையும் நாம் நினைவு கூர்ந்து கொள்ள வேண்டும்.

அ எனப்படும் அகிம்சைப் போராட்டம் ஆ எனப்படும் ஆயுதப்போராட்டம் நடைபெற்றுள்ள நிலையில் இன்று இ எனப்படும் இராஜதந்திரப் போராட்டம் வெற்றியடைய வேண்டும்' என அவர் குறிப்பிட்டார்.

"மற்றுமொரு வேலுபிள்ளையின் மகன் போராட வரமுன் தமிழர்க்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும்: யோகேஸ்வரன் எம்.பி " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty