'வடக்கு கிழக்கு இணைப்பு, சிறையில் வாடும் இளைஞர்களின் விடுதலையே எனது எதிர்பார்ப்பு'
17-08-2012 01:41 PM
Comments - 0       Views - 289
                                                                                       (ஜதுசன்)
'வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும். சிறையில் வாடும் இளைஞர் யுவதிகள் விடுவிக்கப்பட வேண்டும். இதுவே எனது தேர்தலின் வெற்றியின் பின்பான எதிர்பார்ப்பு என மண்டூரில் இடம்பெற்ற தேர்தல் பிரசார மேடையில் உரையாற்றிய ஞா.கிருஷ்ணபிள்ளை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்

'நான் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்தின் திருப்பழுகாமத்தைச் சேர்ந்த மிகவும் அடிமட்ட வறுமைக் கோட்டின் கீழ் இருந்த குடும்பத்தில் பிறந்தவன்.

16 வயதில் இருந்து தமிழ் மண்ணை நேசித்து அதற்காக குரல் கொடுத்து சிறைவாசமும் அனுபவித்தவன் நான். என்னை எல்லோரும் வெள்ளிமலை என அழைப்பார்கள். இந்த வெள்ளிமலை முன்நாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட. எனது குரல் தொடர்ந்து ஒலித்தது. புரிந்துணர்வு உடன்படிக்கை காலத்தில் பல சாதனைகளை நிலைநாட்டியவன் நான். இதனால் பல வேதனைகளையும் அனுபவிக்க இந்த வெள்ளிமலை தவறவில்லை.

பல தேர்தல்களில் போட்டியிட்டு இருக்கின்றேன். இரண்டு தடவை நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டேன். இம்முறை கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றேன். என்றும் தோல்வியைக் கண்டு அஞ்சுபவன் நானல்ல. வெற்றியைக் கண்டு சந்தோசப்படுபவனும் நானல்ல. வெற்றி தோல்வி இரண்டும் ஒன்றுதான். மக்கள் சேவைக்கு என்னை அர்ப்பணித்தவன். நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் மக்களுக்காக குரல் கொடுத்தேன். உரத்த கத்தினேன்.
எனது குரல் ஓங்கி ஒலித்தது. பல சவால்களுக்கு முகம்கொடுத்தேன். சிலரால் புறக்கணிக்கப்பட்டேன். பொதுமக்களாகிய உங்களால் அரவணைக்கப்பட்டேன். இதன் பலன் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தமிழரசு கட்சியில் போட்டியிடுகிறேன்.

கடந்த கால வரலாற்றை சற்று புரட்டிப் பார்த்தால் வீட்டிற்கு ஒரு பிள்ளை தா, இல்லையேல் பெற்றோரை அடைத்து வைப்பேன் என்று படுவான்கரையில் இளைஞர் யுவதிகளை அன்று பிடித்த, அன்றைய விடுதலைப் புலிகளின் தளபதி இன்று அரசாங்கத்திற்கு வக்காளத்து வாங்கி முன்னால் பொலிஸ் செல்ல, பின்னால் ஆமி செல்ல நடுவில் விசேட அதிரடிப்படை செல்ல உல்லாசமாக குளிர்காற்றடிக்கும்  வாகனத்தில் சவாரி செய்கிறார்.

ஆனால் பிடிக்கப்பட்ட இளைஞர்கள், யுவதிகள், கட்டாயப் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் இன்று உயிருடன் இல்லை. ஊனமுற்ற நிலையில் கவலையில் வாடும் பெற்றோர்கள் ஒரு புறம். தங்கள் பிள்ளை இல்லையே என கண்ணீர் வடிக்கும் தாய்மார் இன்னுமொரு புறம். எனவே தன்மானமுள்ள தமிழனாக வாழ வேண்டுமானால், எமது உரிமைகளை பெறவேண்டுமாக இருந்தால் தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்திற்கு வாக்களியுங்கள். உரிமை பெறப்படட்டும். வடக்கு கிழக்கு இணைக்கப்படட்டும். இளைஞர் யுவதிகள் சிறையில் இருந்து விடுவிக்கப்படட்டும். பின்பு தொழில் வாய்ப்பு, அபிவிருத்தி ஆகிய இரண்டும் தானாகவே வரும்.

இன்று தமிழர்களின் பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது. தமிழனுக்கு ஏதேனும் நடந்தால் தட்டிக்கேட்க சர்வதேச சமூகம் உண்டு. அபிவிருத்தி, தொழில் வாய்ப்பு என்ற மாயவலையில் சிக்க வேண்டாம். எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பரீட்சையில் சித்தியடைந்து எமது பலத்தை நிருபிப்போம். எமது பலத்தை ஒருங்கிணைப்போம். எமது பாதையை பலப்படுத்துவோம். எமது சிந்தனையை நடைமுறைப்டுத்துவோம். எல்லாவற்றிற்கும் உங்கள் ஆணை தேவை என்றார்.
"'வடக்கு கிழக்கு இணைப்பு, சிறையில் வாடும் இளைஞர்களின் விடுதலையே எனது எதிர்பார்ப்பு'" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty