சம்பூர் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எமது உறவுகள் முன்வர வேண்டும்: சிவசக்தி ஆனந்தன்
12-07-2012 06:16 PM
Comments - 0       Views - 389
(நவரத்தினம்)

தமது சொந்த நிலத்தில் செல்வந்தராக வாழ்ந்த சம்பூர் மக்கள் இன்று செய்வதறியாது நடுத்தெருவில் தவிக்கின்றனர். அவர்களுக்கு எமது உறவுகளே உதவ முன்வரவேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாம் சம்பூர் மக்களை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினோம். அவர்கள் திட்டமிட்ட பின்தங்கிய மக்களாக ருவாக்கப்பட்டுள்ளனர். சம்பூர் மக்கள் தற்போது வசிக்கும் பிரதேசத்திற்கும் கடலுக்கும் சுமார் முப்பது கிலோமீற்றர் தூரம் உள்ளது. வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் கூலி வேலையும் கிட்டவில்லை. மேலே குறிப்பிட்டதைப் போன்று சகல வசதிகளையும் தேடிக்கொண்டு சுகபோக வாழ்க்கையை அனுபவித்து வந்த சம்பூர் மக்கள் இன்று தங்களது காணிகளைக்கூட அடையாளம் காணமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருந்த வீடுகள் முற்றுமுழுதாக இடிக்கப்பட்டு, இவர்களது வளவுகளில் இருந்த மரங்கள் வேருடன் சாய்க்கப்பட்டு, வீட்டின் பின்புறமாகத் தோண்டப்பட்ட பாதாளக்குழிகளில் தள்ளப்பட்டு மண்போட்டு மூடப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட செயற்கையான பூமிப்பிளவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் பாடசாலையும், வழிபாட்டுத்தலங்களும் கூட அடங்கும். சம்பூரில் இருந்த பாடசாலையையும் அழித்து கல்விக்கு இழுக்கை சேர்ந்துள்ளது இலங்கை அரசு. இது ஆசியாவின் ஆச்சர்யம்தான்.

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றனர் எமது ஆன்றோர்கள். ஆனால் இவர்கள் இருக்கின்ற கோயிலையும் இடித்துத் தள்ளியள்ளனர். எத்தனை பெரிய சாதனை இது? ஓகோ தமிழினத்தின் அடையாளத்தை அழிப்பதுதான் இலங்கையின் பகுத்தறிவுக் கொள்கை போலும்.

தகரக் கொட்டிலில் சம்பூர் மக்களைத் திறந்த வெளிச் சிறைச்சாலையில் அடைத்து வைத்துள்ளது இந்த அரசாங்கம். வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் மூதாட்டிகளும் வயது முதிர்ந்த ஆண்களும் வெளியில் மரநிழலில் தஞ்சம் புகுகின்றனர். இரவில் சற்றும் பாதுகாப்பற்ற சூழலிலேயே இவர்கள் தமது வாழ்க்கையைக் கொண்டு செலுத்துகின்றனர். புற்றுநோயால் தனது கணவனை இழந்த ஒரு பெண் தனது இரண்டு பிள்ளைகளைக் கரைசேர்ப்பதற்கு வழிதெரியாமல் தவிக்கின்றார்.

இந்தக் கொட்டிலில்தான் இவர்களது சமையலறை, படுக்கையறை, உணவு உட்கொள்ளும் அறை, வரவேற்பறை, மாணவர்களுக்கான படிப்பறை என்ற அனைத்தும் அடங்குகின்றன. இதனால் இவர்களது குடும்ப அந்தரங்கம் கேள்விக்குறியாகியுள்ளது. குடிசைகள் அடுத்தடுத்து அமைந்துள்ளதால் குடும்ப இரகசியங்கள் பேணமுடியாதுள்ளது. தமது வீடுகளில் இவர்கள் இருந்த இருப்பையும் இப்பொழுது வாழ்கின்ற வாழ்க்கையையும் சம்பூர் மக்கள் ஏக்கத்துடன் ஒப்பீடு செய்கின்றனர்.

எப்படியாவது எங்களைப் பிச்சையெடுக்க வைக்க வேண்டும் என்பதில் இந்த அரசாங்கம் முடிவெடுத்துச் செயற்படுவதாகவே எமக்குத் தோன்றுகின்றது. நாங்கள் எங்களைத் தேடி வந்தவர்களுக்குச் சோறுபோட்டவர்கள் எத்தனை துன்பம் வந்தாலும் பிச்சையெடுக்கின்ற கேவலத்தை மட்டும் நாங்கள் செய்ய மாட்டோம் என்றார் ஒரு முதியவர். தள்ளாத வயதிலும் அவரது தன்னம்பிக்கை எமக்கு ஆச்சரியமூட்டுவதாக அமைந்தது.

பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு முகாம்களுக்கருகாமையில் உள்ள பாடசாலைகளில் படிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொழில் வாய்ப்பு ஏதுமின்றி நாளாந்தம் ஒரு வேளை உணவிற்குக் கூட உத்தரவாதமின்றி இருக்கும் குடும்பச் சூழலில் உள்ள பிள்ளைகள் எவ்வாறு நிம்மதியாகத் தமது கல்வியைத் தொடர முடியும்? சில பிள்ளைகள் பாடசாலையில் மயங்கி விழுந்து விடுவதாகக்கூடத் தெரிகிறது. பிள்ளைகள் காலணிகள்கூட இல்லாமல் பாடசாலைக்குச் செல்கின்றனர்.

மழையோ அல்லது காற்றுடன் கூடிய மழையோ பெய்தால் இவர்களது நிலை மிகவும் பரிதாபம். ஏற்கனவே இவர்களது தகரக் கொட்டில்கள் உக்கிப்போய் எந்நேரமும் சரிந்துவிழக்கூடிய நிலையில் உள்ளது.

அவர்களை இங்கிருந்தும் அகற்றும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் அரசாங்கம், வாழ்வதற்கே தகுதியற்ற நிலங்களைக் காட்டி நீங்கள் இங்குதான் தங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால் சம்பூர் மக்கள் தங்களது இடத்தைத் தவிர வேறு எங்கும் தம்மால் குடியேற முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர்.

இதனால் அவர்களை இப்பொழுது வசிக்கின்ற இடத்திலிருந்து அப்புறப்படுத்தும் நோக்கில், அவர்களுக்கான உலர் உணவுக்கொடுப்பனவுகளை அரசாங்கம் நிறுத்தியுள்ளது. மீள்குடியேற்றம் முடிவுற்று ஆறுமாதங்களின் பின்னரே உலர் உணவுகள் நிறுத்தப்படுவது வழக்கம். ஆனால் இடைத்தங்கல் முகாமிலேயே இவர்களுக்கான உலர்உணவுக் கெடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் பட்டினிபோட்டு மக்களைப் பணிய வைக்க அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிகின்றது.
இத்தகைய இடநெருக்கடிக்கு மத்தியிலும் இடம்பெயர்ந்து வாழும் சம்பூர்வாழ் தமிழ்ப் பிள்ளைகள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி தமது பல்கலைக்கழக அனுமதியைப் பெற்று பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு அதனை தமது வாழ்க்கைக்கான சவாலாக எடுத்துக்கொண்டு துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் எதிர்கொள்கின்றனர்.

தினமும் சாப்பாட்டிற்கே சிரமப்படுகின்ற பெற்றோர்களால் தமது பிள்ளைகளின் கல்விக்கு உதவ முடியாமல் ஒரு புறமும் அவர்களது படிப்பை இடைநிறுத்திவிடக் கூடாது என்று மறுபுறமாகவும் மிகுந்த கவலையுடன் உள்ளனர். அவர்களது படிப்புச் செலவிற்காகவும், தங்குமிடம் மற்றும் ஏனைய தேவைகளுக்காகவும் மாதந்தோறும் பத்தாயிரம் ரூபாய்வரை தேவைப்படுவதாகக் கூறுகின்ற பல்கலைக்கழக மாணவ மாணவியர் செய்வதறியாது தவிக்கின்றனர்.

இவர்களது கல்விச்செலவிற்கும் மக்களின் உணவுப் பிரச்சினைக்கும் தீர்வுகாண்பதற்கு எமது உறவுகள்; முன்வர வேண்டும் எனவும் சிவசக்தி ஆனந்தன் எம்.பி தெரிவித்தார்.
"சம்பூர் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எமது உறவுகள் முன்வர வேண்டும்: சிவசக்தி ஆனந்தன் " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty