முஸ்லிம்களுடன் இணக்கப்பாட்டுக்கு வந்தால் தீர்வு காண்பது இலகு என உலகத் தலைவர்கள் தெரிவித்தனர்: சம்பந்தன்
03-08-2012 04:46 PM
Comments - 1       Views - 870
                                                            (சி.குருநாதன், கஜன்)
'முஸ்லிம் மக்களுடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரும் பட்சத்தில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணுவது இலகுவாக இருக்கும் என்று உலகத்தலைவர்கள் சிலருடனான சந்திப்பின்போது எமக்கு தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் அஷ்ரப்புடன் அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணி நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையிலேயே நாம் இன்று பேசி வருகின்றோம்' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சி.தண்டாயுதபாணிக்கு ஆதரவு தெரிவித்து நேற்று வியாழக்கிழமை மாலை திருகோணமலை நியூசில்வர்ஸ்டார் ஹோட்டலில் திருகோணமலை கல்விச் சமூகம் ஒழுங்கு செய்திருந்த பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றிய போது சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்;ந்தும் உரையாற்றிய அவர்,

'மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரிஸின் தலைவர் அஷ்ரப்புடன் அன்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்போது வடக்கு மாகாணத்துடன் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை இணைத்து வடக்குகிழக்கு மாகாண சபை ஒன்றையும் கல்முனை, சம்மாந்துறை மற்றும் பொத்துவில் ஆகிய பகுதிகளை இணைத்து தென்கிழக்கு மாகாண சபை ஒன்றையும் உருவாக்குவது பற்றி ஆராயப்பட்டது.

அதன்படி, வடக்கு மாகாண சபைக்கு தமிழ் முதலமைச்சராகவும் முஸ்லிம் ஒருவர் பிரதி முதலமைச்சராகவும் இருக்க வேண்டும் என்றும் தென்கிழக்கு மாகாணசபைக்கு முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராகவும் தமிழர் ஒருவர் பிரதி முதலமைச்சராகவும் இருக்க வேண்டும் என்று அப்பேச்சுவார்த்தையின் போது பிரஸ்தாபிக்கப்பட்டது.

அந்த அடிப்படையில்  வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற முஸ்லிம்களுடன் ஒற்றுமையாக வாழக்கூடியதாக தாராளமாக விட்டுக்கொடுத்து நீண்ட கால அரசியல் அபிலாசைகளுக்கு நிரந்தரமானதும் நியாயமானதுமானதும் மற்றும் நிலைத்து நிற்கக்கூடியதுமான அரசியல் தீர்வு ஒன்றை காண விரும்புகின்றோம்' என தெரிவித்தார்.

முதன்மை வேட்பாளர  சி.தண்டாயுதபாணி உரையாற்றுகையில், 

'மாகாணசபை  அதிகாரத்தை கைப்பற்றுவதன் மூலம் தமிழ் மக்களின் சகல உரிமைகளும் வென்றெடுக்கப்படும் என அர்த்தமாகாது. தமிழ் மக்கள் தமது சுய கௌரவத்துடன் வாழும் சூழலை  நாம் ஏற்படுத்த வேண்டும். சர்வதேச சமூகத்திற்கு தமிழ் மக்கள்  கிழக்கு  மாகாணத்தில் ஒற்றுமையாக  இருக்கின்றார்கள் என்ற செய்தியை ஒருமித்து  தெரிவிப்பதற்கு இத்தேர்தலை நாம் சாதகமாக  பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கிழக்கு  மாகாண சபையின் முடிவினை  சர்வதேசம் வெகு உன்னிப்பாக  அவதானித்து வருகின்றது. இத் தேர்தலில் அரசாங்க  கட்சியின் சார்பில் போட்டியிடும் எந்த தமிழரும் வெற்றி பெறக் கூடாது.  அரசாங்கம்  தமிழ் பிரதிநிதிகள் வெற்றி பெறுவதை காட்டி  கிழக்கு  மாகாணத்தில் தமிழ் மக்கள் அரசாங்கத்துடன் இருக்கின்றார்கள் என்ற  பிரசாரத்தை மேற்கொள்ள  ஆயத்தமாக  இருக்கின்றது. இது ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கும் அச்சுறுத்தலாக எதிர்காலத்தில் இருக்கும்.

தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு  தமது எதிர்ப்பினை காட்டுவதற்கு இத்தேர்தலை  சாதகமாக  பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெறும் அபிவிருத்தி திட்டங்கள் மாத்திரம் தமிழ் மக்களின் தீர்வாக  அமைய மாட்டாது' என்றார்.

திருகோணமலை மாவட்டத்தின் முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம், வேட்பாளர்கள் ப.நித்தியானந்தம்,  ந.குமணன் ஆகியோரும் இக்கூட்டத்தில் உரையாற்றினர்."முஸ்லிம்களுடன் இணக்கப்பாட்டுக்கு வந்தால் தீர்வு காண்பது இலகு என உலகத் தலைவர்கள் தெரிவித்தனர்: சம்பந்தன் " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (1)
Aqil Amad 04-08-2012 02:42 AM
ஐயா, ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பது தமிழ் பழமொழியாயிற்றே! அதனை உங்களுக்கு உலகத் தலைவர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டிப்போனது துரதிஷ்ட்டம்.
Reply .
0
1
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty