வெள்ளிக்கிழமை, 25 மே 2012

ஹட்டனில் இரவுநேர உணவகங்களைத் திறக்க வேண்டுகோள்

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

ஹட்டன் நகரில் இரவுநேர உணவகங்களை மீண்டும் திறப்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறினார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'ஹட்டன் நகரில் பன்னெடுங்காலமாக இரவுநேரங்களில் உணவகங்கள் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெறுவதால்  பொதுமக்கள்  பயனடைகின்றனர்.  கொழும்பு, கண்டி போன்ற தூர இடங்களிலிருந்து மாலை வேளைகளில் ஹட்டனுக்கு புறப்படும் பயணிகள் இரவு 10 மணிக்கு மேல் ஹட்டன் நகரை  வந்தடைகின்றனர்.

ஹட்டனுக்கு இரவுநேர பஸ் சேவைகளும் ஹட்டனிலிருந்து கண்டி, கொழும்பு போன்ற பகுதிகளுக்கு அதிகாலை வேளைகளில் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன. அத்துடன், ஹட்டனில் இரவுநேர ரயில் சேவைகளும் இடம்பெறுகின்றன. இவ்வாறான தருணங்களில்  ஹட்டன் நகரில் இரவு வேளைகளிலும் அதிகாலை வேளைகளிலும் மக்கள் நடமாட்டம் காணப்படுகின்றன. இவர்கள் தமது உணவு தேவைகளைப் பெரும்பாலும் ஹட்டன் நகரிலுள்ள இரவு உணவகங்களிலேயே பூர்த்தி செய்கின்றனர். பொதுமக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய இரவுநேர உணவகங்களை  மூடுமாறு உத்தரவிடுவதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது. இந்த உணவகங்கள் சட்டதிட்டங்களை மீறியிருக்குமானால் அதற்கு எதிராக சம்பந்தப்பட்ட தரப்புக்கள் சட்ட ரீதியாக அணுகுவது வரவேற்கத்தக்கது.

இதை தவிர்த்து தனிப்பட்ட காரணங்களுக்காக சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்வதற்காக  மக்கள் அரசியல்வாதிகளுக்கு அதிகாரம் வழங்கவில்லையென்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  ஹட்டன் நகரிலுள்ள உணவகங்களில் மனித பாவனைக்கு உதவாத உணவு விற்பனை செய்யப்பட்டிருந்தால் ஹட்டன் சுகாதாரப் பிரிவினர் ஏன் இதுவரை நடவடிக்கை எக்கவில்லை. ஏனைய குற்றச்சாட்டுகள் குறித்து ஹட்டன் பொலிஸார்  ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே இந்த இரண்டு தரப்புக்களும் இந்த விடயங்கள் குறித்து பொதுமக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும். மாறாக மக்கள் அறியாமையில் இருக்கிறார்களென நினைத்துக்கொண்டு ஒரு சிலர் மேற்கொள்கின்ற அடாவடித்தனங்களை நாம் எப்போதும் கைகட்டி பார்த்துக் கொண்டிருக்கப்போவதில்லையென்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

அத்துடன், ஹட்டன் நகரில் முஸ்லிம், தமிழ் சமூகங்களுக்கிடையே குரோத மனப்பாங்கினை எவராது ஏற்படுத்தி அதன் மூலம் ஏற்பட போகின்ற பாதகமான விளைவுகளுக்கு சம்பந்தப்பட்ட தரப்புக்கள் பொறுப்புக்கூற வேண்டிய நிலைமையும் ஏற்படுமென்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்' என்றார். 

Views: 267

Comments   

 
0#vasu2012-02-10 04:01
"இதை தவிர்த்து தனிப்பட்ட காரணங்களுக்காக சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்வதற்காக மக்கள் அரசியல்வாதிகளுக்கு அதிகாரம் வழங்கவில்லையென்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்"

இப்படி திகாம்பரமா சொல்கிறார். இதை தான் "ஊருக்கு உபதேசம்......." என்பது.
Reply
 

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.