ஆலயத்திற்குள் பசு இறக்கக்கூடாது என்றே பண்ணையில் வைத்து பராமரித்தோம்: சுவாமிநாதன் எம்.பி
08-03-2012 11:00 PM
Comments - 1       Views - 819

 

"கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் கன்று ஈனுவதற்கிருந்த ஆலய பசு, சுகவீனமுற்று இறக்கும் தருவாயில் இருந்தது. அதனாலேயே அந்தப் பசுவை வத்தளை பிரதேசத்திலுள்ள பண்ணையொன்றில் வைத்து பராமரித்தோம். இருப்பினும் அது அங்கு இரண்டு தினங்களேனும் உயிரோடு இருக்கவில்லை. 

சுகவீனம் காரணமாக இறந்துவிட்டது. ஆனால் அந்தப் பசுவை இறைச்சிக்காக விற்றோம் என்று எம் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். இக்குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் இல்லை" என ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தின் தர்மகர்த்தாவும் நாடாளுமன் உறுப்பினருமான டீ.எம்.சுவாமிநாதன் - தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் கன்று ஈன்றுவதற்கிருந்த பசு, சுகவீனமுற்ற காரணத்தினால் இறைச்சிக்காக விற்கப்பட்டதாக மிருகங்கள் காப்பக சங்கத்தினரால் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"குறித்த பசுவின் ஆயுட்காலம் முடிந்துவிட்டதை மிருக வைத்தியர்கள் மூலம் அறிந்துகொண்ட நாம், ஆலய வளாகத்துக்குள் அந்தப் பசு இறந்துவிடக் கூடாது என்பதற்காகவே வத்தளை பிரதேசத்திலுள்ள பண்ணையொன்றில் வைத்து பராமரித்து வந்தோம்.

ஆலயப் பசு என்பதால் அதனை நெற்கள் மீது வைத்து அதற்குரிய மரியாதையுடன் கவனித்து வந்தோம். அத்துடன், அந்தப் பசுவுக்கான சிகிச்சைகளை மிருக வைத்தியர்கள் இருவர் தொடர்ந்தும் வழங்கிக்கொண்டே வந்தனர். இருப்பினும் அந்தப் பசு குறித்த பண்ணைக்கு கொண்டு செல்லப்பட்டு ஒன்றரை நாட்களேயான நிலையில் இறந்துவிட்டது.

இந்துக்களாகிய நாம் பசுக்களை இறைச்சிக்காக விற்கும் ஈனச் செயல்களில் ஈடுபட மாட்டோம். இந்நிலையில், நாம் குற்றம் செய்தோம் என்று எம் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பலரும் இலாபமடையப் பார்க்கிறார்கள். எம்மீது பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியவர்களை அந்தக் கடவுள் கவனித்துக்கொள்வார்'" என்று சுவாமிநாதன் எம்.பி. மேலும் கூறினார்.

பிரபா கணேசன் எம்.பி.

'பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தின் கன்று ஈன்றுவதற்கிருந்த நிலையில் இருந்த பசு சுகயீனமுற்ற காரணத்தினால் வெல்லம்பிடியிலுள்ள இறைச்சி விற்கும் நிலையத்திற்கு விற்கப்பட்டதாக தன்னிடம் மிருகங்கள் காப்பக சங்கத்தினரால் புகார் செய்யப்பட்டுள்ளளதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசனிடம்,  பிரபா கணேசன் எம்.பி. ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-


"கொழும்பு கொச்சிக்கடை பொன்னம்பலவானேஸ்வர் ஆலயத்தில் பல பசு மாடுகள் வளர்க்கப்படுவது அனைவரும் அறிந்த விடயம். இந்த பசு மாடுகளின் கன்று ஈனும் நிலைமையில் இருந்த பசு ஒன்று காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சுகயீனமுற்றிருந்தது. இந்த பசுவை குணப்படுத்துவதற்காக கொழும்பு பெட்கெயார் வைத்தியாசாலையைச் சேர்ந்த டாக்டர் விஜேகுமார் மூலமாக வைத்தியம் செய்யப்பட்டது.

சம்பந்தப்பட்ட பசு சத்தமிட்டு ஆலய வலாகத்தில் தொந்தரவிட்டதன் காரணமாக வெல்லம்பிடியைச் சேர்ந்த ஆர்.ஜயலத் என்பவரிடம் பசு ஒப்படைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இது சம்பந்தமாக ஆலய நிர்வாகத்திடம் வினவிய போது சனிக்கிழமை வேறொரு ஆலயத்திற்கு இந்த பசுவை இடமாற்றியதாக தெரிவித்தார்கள்.

ஆனால் வெல்லம்பிடிய இறைச்சி அறுக்கும் மடுவத்தில் இந்த பசுவின் உடல் மிருக காப்பக நிர்வகத்தினால் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி இந்த பசுவின் உடல் புகைப்படம் பிடிக்கப்பட்டு படங்கள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த பசுவை தலையில் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது படங்களின் மூலமாக தெரியவந்துள்ளது. இருப்பினும் ஆலய நிர்வாகம் இந்த பசு இயற்கையாக மரணமடைந்ததாக இப்போது தெரிவிக்கின்றார்கள்.

பசு இயற்கையாக மரணமடைந்திருந்தால் வெல்லம்பிடிய இறைச்சி அறுக்கும் மடுவத்திற்கு கொண்டு சென்றிருக்க தேவையில்லை. வெல்லம்பிடியவில்  மிருக காப்பகத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள்.

இது சம்பந்தமாக மிருக காப்பகத்தினர் கொட்டாஞ்சேனை பொலிஸிலும் வெல்லம்பிடிய பொலிஸிலும் புகார் செய்துள்ளார்கள். வெல்லம்பிடிய பொலிஸ் பொறுப்பதிகாரி சமரநாயக்க இது சம்பந்தமாக விசாரணையை ஆரம்பித்துள்ளார்.

ஆலயம் சம்பந்தப்பட்ட இந்த விடயத்தை ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டாம் என்று மிருக காப்பக சங்கத்தினரிடம் பயமுறுத்தல் விடுக்கப்பட்ட தொலைபேசி உரையாடல்களின் பதிவும் எனக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்து மதத்தின் கோட்பாடுகளுக்கெதிராக ஆலய நிர்வாகம் நடந்து கொண்டதா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்."

"ஆலயத்திற்குள் பசு இறக்கக்கூடாது என்றே பண்ணையில் வைத்து பராமரித்தோம்: சுவாமிநாதன் எம்.பி " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (1)
Maravan 09-03-2012 03:10 PM
இதிலும் அரசியலா.. உங்களைத் திருத்த முடியாதப்பா...
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty