தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை சிங்கள, ஆங்கில ஊடகங்கள் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்வது இல்லை: மனோ
12-07-2012 10:13 PM
Comments - 0       Views - 259
"தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களை சிங்கள, ஆங்கில தேசிய ஊடகங்கள் சிங்கள மக்கள் மத்தியில்  கொண்டு செல்வது இல்லை. உண்மைகளை கொண்டு செல்லாதது மட்டும் இல்லை, பல வேளைகளில் பொய்களை உரைக்கவும் சிங்கள ஊடகங்கள் முன்னிற்கின்றன. இத்தகைய பொய், புரட்டு கதைகளில் சிக்கி எதிர்நீச்சல் அடித்து நீந்தி வந்தவன், நான். ஆனாலும் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களுக்கு மீதான அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தில் நாம் எப்போதும் எம்மை இணைத்து கொண்டுள்ளோம் என்பதை  மறவாதீர்கள்" என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பு ஜெயவர்தன  நிலையத்தில் ஊடக கூட்டமைப்பு நடத்திய  கூட்டத்தில்  உரையாற்றிய மனோ கணேசன் மேலும்   உரையாற்றுகையில்,

"நாங்கள் தமிழ்  மக்கள் தொடர்பில் அச்சமின்றி குரல் எழுப்பும் அதே வேளையில், சிங்கள மக்கள் மற்றும் ஊடகவியலாளர் தொடர்பிலும் அக்கறை கொண்டுள்ளோம். தமிழ் மக்கள் தொடர்பான  எனது குரலை எவரும் நிறுத்தவும் முடியாது.  எமது  போராட்டத்தை  எவரும் அடக்கிவிடவும் முடியாது. அதேவேளை பொய் உரைகள் மூலமாகவும் எம்மை எவரும் அழித்துவிடவும்  முடியாது.

அண்மையில் வவுனியா சிறையில் தமிழ் கைதிகள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் பற்றி, கைதிகள் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டது பற்றி, ஒருவர் கொல்லப்பட்டு இன்னும் பலர் குற்றுயிராக மருத்துவமனையில் கிடப்பது பற்றி, சிங்கள ஊடகங்கள் அக்கறை காட்டுவதில்லை. இது பற்றி எனக்கு மன வருத்தம் இருக்கிறது. இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்று இந்த அரசாங்கத்தை நாம் திட்டி தீர்க்கிறோம். அரசாங்கத்தின் ஊழல்கள் பற்றி, ஊடக அடக்கு முறை பற்றி, மனித உரிமை மீறல்கள் மாற்றி பேசுகிறோம். ஆனால் இந்த அரசு நிலைத்து நிற்பதற்கு எதிர் கட்சிகளின் மத்தியில் உள்ள ஒற்றுமை இன்மைதான் பெரும் காரணம். அரசின் தவறுகள் பற்றியும் தமிழ் மக்களுக்கு எதிராக இந்த அரசு நிகழ்த்தும் கொடுமைகள் பற்றியும் அனைத்து எதிர்கட்சிகளும் ஒரே மேடையில் ஏறி நின்று பேசுவதில்லை. பிரிந்து நின்று குரல் எழுப்புவது காரணமாகவே எதையும் செய்து விட்டு இந்த அரசு தப்பி விடுகிறது.

இந்த அரசாங்க ஊடகங்கள் எனக்கு எதிராக பொய் செய்திகளை நிர்மாணித்து எழுதினார்கள். நான் போர் நிறுத்த உடன்பாடு காலத்தில் கிளிநொச்சி சென்று புலிகளின் மேடை மீது ஏறி, இன்னும் இந்நாட்டில் தமிழ், சிங்கள மக்கள் இணைந்து வாழ அவகாசம் இருக்கிறது என்று பேசினேன். அதை   இவர்கள்  நான்  தமிழ் மக்களை ஆயுதம் தூக்குங்கள்  என்று சொன்னதாக திரித்து எழுதினார்கள். கனடா சென்று ஜனநாயக கருத்தரங்கில் கலந்துகொண்டு வந்ததை, புலிகளின் கூட்டத்தில் கலந்து பேசிவிட்டு வந்தேன் என  எழுதிதினார்கள்.  இவர்கள்தான் இன்று தம்மை யோக்கியர்கள் என கூறி  கொண்டு.  சுயாதீன இணைய தளங்களை அடக்கி மூட முயற்சிக்கிறார்கள்" என்றார்.  


"தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை சிங்கள, ஆங்கில ஊடகங்கள் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்வது இல்லை: மனோ " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty