பிரெஞ்சு பிரஜைகள் மூவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை
21-08-2012 09:46 PM
Comments - 0       Views - 594
கண்டி எம்பேக்கே தேவாலயத்தில் புத்தர் சிலைகளுக்கு முன்னால் ஒழுங்கீனமான முறையில் போஸ் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பிரெஞ்சு பிரஜைகள்  மூவருக்கு காலி நீதவான் நீதிமன்றம்  5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும் தலா 1500 ரூபா அபராதமும் விதித்தது.

மேற்படி மூவரின் இருவர் பெண்களாவர். கிறிஸ்டினா மார்கரிட்டா, ஜோர்ஜ், எமிலி ஆகிய மூவரும் காலி பொலிஸாரினால் காலி பிரதம நீதவான் யூ.எஸ். கலன்சூரிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கண்டியிலுள்ள எம்பேக்கே தேவாலயத்தில் புத்தர் சிலையை கட்டித்தழுவியவாறும் முத்தமிட்டவாறும் புகைப்படம் எடுத்துக்கொண்ட இச்சுற்றுலா பயணிகள் மூவரும் பின்னர் காலிக்கு சென்று அங்குள்ள புகைப்படப்பிடிப்பு நிலையமொன்றில் படங்களை அச்சிட முயன்றனர். இப்புகைப்படங்களை அவதானித்த அந்நிலையத்தின் முகாமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதையடுத்து காலி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்தன தலைமையிலான பொலிஸார் இச்சுற்றுலா பயணிகளை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். இச்சுற்றுலா பயணிகள்  சார்பில் ஆஜரான வழக்குரைஞரின் கோரிக்கையைடுத்து, அவர்களின் கமெராக்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. எனினும் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் அழிக்கப்பட்டன. (டி.ஜி. சுகதபால, கிரிஷான் ஜே.ஜயருக்)


"பிரெஞ்சு பிரஜைகள் மூவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty