செட்டிகுளம் முகாம் மூடப்பட்டது; எஞ்சியிருந்த 360 குடும்பங்கள் முல்லையில் மீள்குடியேற்றம்
24-09-2012 01:01 PM
Comments - 0       Views - 504

(ரொமேஸ் மதுசங்க, நவரத்தினம்)


இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்த மக்களை கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக தங்க வைக்கப்பட்டிருந்த வவுனியா, செட்டிக்குளம் நலன்புரி முகாம் இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக மூடப்பட்டது.

இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து வந்த நிலையில் தங்க வைக்கப்பட்டிருந்த இந்நலன்பரி நிலையமானது மக்களின் படிப்படியான மீள்குடியேற்றத்தின் பின்னர் இறுதியாக கேப்பாபிளவு மற்றும் மந்துவில் கிராமங்களைச் சேர்ந்த 360 குடும்பங்களையும் முல்லைத்தீவில் மீள்குடியேற்றுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேற்படி முகாம் பொறுப்பதிகாரியான மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா கூறினார்.

இவ்வாறு மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களில் சுமார் 150 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவில்லை எனவும் அவர்களுக்கான மாற்று இடங்கள் வழங்கப்பட்டு அவ்விடங்களிலேயே அவர்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஐ.ஓ.எம் நிறுவனத்தின் உதவியுடன் மீள்குடியேற்றத்திற்காக செல்லும் 360 குடும்பங்களிலும் 1186பேர் அடங்குவதாகவும் இவர்களில் சுமார் 110 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை முல்லைத்தீவு, மந்துவில் பிரதேசத்தில் குடியேற்றுவதாகவும் ஏனையோரை வேறு சில இடங்களில் குடியேற்றுவதாகவும் மேஜர் ஜெனரல் குறிப்பிட்டார்.

சொந்த இடங்கள் தவிர்ந்த வேறு இடங்களில் குடியேற்றுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை மேற்படி மக்கள் எதிர்த்தனர். இருப்பினும் அவர்களை சமாதானப்படுத்தி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றப்படும் இம்மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் இராணுவத்தினர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா மேலும் தெரிவித்தார்.

"செட்டிகுளம் முகாம் மூடப்பட்டது; எஞ்சியிருந்த 360 குடும்பங்கள் முல்லையில் மீள்குடியேற்றம் " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty