வடமாகாண தேர்தல் தொடர்பில் அரசாங்கம் நகைச்சுவை நாடகம் போடுகிறது: மனோ
11-05-2012 12:04 PM
Comments - 0       Views - 528
'கண்ணிவெடிகள் அகற்றப்படாததால்தான் இதுவரை வடக்கில் மாகாணசபை தேர்தல் நடத்தபடவில்லை என்று அரசாங்கம் வெட்கமில்லாமல் பொய் சொல்கிறது. கண்ணிவெடி காரணமாகத்தான் தேர்தல் நடத்தாமல் இருக்கின்றோம் என்று உலகத்தை நம்பவைக்க அரசாங்கம் நடத்தும் நல்ல நகைச்சுவை நாடகம் இதுவாகும். இந்த நாடகத்துக்கு திரைக்கதை வசனம் எழுதியவருக்கு ஒஸ்கார் விருதையே வழங்கலாம்' என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

வடக்கில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணிவெடிகள் அனைத்தும் முற்றாக அகற்றப்பட்டு சிவில் நிர்வாகம் முன்னெடுக்கப்பட்டதன் பின்னரே வட மாகாண தேர்தல் நடத்தப்படும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பு தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மனோ கணேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'தமிழ் மக்களின் நிர்வாகத்தின் கீழ் எந்த ஒரு புதிய சபையும் வந்துவிடக் கூடாது என்பதுதான் இந்த அரசாங்கத்தின் இனவாதக் கொள்கையாகும். இந்த நோக்கிலேயே அரசாங்கம் காய் நகர்த்துகின்றது. இது வடக்கில் மாத்திரம் அல்ல. மலையகத்திலும் நடைபெறுகிறது.

இலங்கையிலேயே மிகப்பெரிய பிரதேச சபைகள் நுவரெலிய மாவட்டத்தில் அமைந்துள்ள அம்பகமுவை, நுவரெலியா ஆகிய இரண்டு பிரதேச சபைகள் ஆகும். இந்த இரண்டு பிரதேச சபைகளையும் மேலும் பிரித்து 12 சபைகளாக மாற்றுங்கள் என்று மலையக கட்சிகள் நீண்ட நாட்களாக கோரிவருகின்றன.

ஆனால் இந்த நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படாமல் காலம் கடந்துகொண்டே வருகின்றது. புதிய சபைகள் ஏற்படுத்தப்பட்டு மலையக தமிழரின் ஜனநாயக நிர்வாகத்தின் கீழ் மேலும் பல புதிய பிரதேச சபைகள் வந்துவிடக்கூடாது என்ற அரசாங்கத்தின் எண்ணமே இதற்கு காரணமாகும்.

இலங்கையில் தேர்தல்கள் நான்கு மட்டங்களில் நடைபெறுகின்றன. ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், மாகாணசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல் என்பவையே அவையாகும்.

யுத்தம் முடிந்த மூன்று ஆண்டுகளில், வடக்கில் முதல் இரண்டு தேர்தல்களும் நடந்து முடிந்துவிட்டன. கடந்த வருடம் நான்காவது மட்ட உள்ளூராட்சி தேர்தலும் நடந்து முடிந்துவிட்டது. ஆனால்  இடையில் வரும் மாகாணசபை தேர்தல்கள்   மாத்திரம் நடத்தப்படவில்லை. இதற்குதான் அரசாங்கம் கண்ணிவெடி கதை சொல்கிறது.

கண்ணிவெடி காரணம் என்றால் ஏனைய தேர்தல்கள் எப்படி நடத்தினார்கள் என்பது தெரியவில்லை. இரண்டு முல்லைத்தீவு மாவட்ட பிரதேசசபைகளுக்கான உள்ளூராட்சி தேர்தல்கள் மாத்திரமே ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஆனாலும்  ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. அதேபோல் மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படுவதில் எந்த தடையும் இருக்க முடியாது.

முழுமையான சிவில் நிர்வாகம் முன்னெடுக்கப்பட்டு, மக்கள் முழுமையாக குடியமர்த்தப்பட்ட  பின்னரே வட மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என்ற மேலதிக காரணம் வேறு சொல்லப்படுகின்றது. உண்மையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபை இருப்பதுதான், சிவில் நிர்வாகம் முன்னேடுக்கப்படவும், மக்கள் மீள் குடியேற்றம் செய்யவும் வழி ஏற்படுத்தும். 

கிழக்கு மாகாணம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்கப்பட்டவுடன் தாமதிக்காது, குத்துக்கரணம் அடித்து ஓடோடி சென்று இந்த அரசாங்கம் அங்கு தேர்தல்களை நடத்தியது. ஆனால் வடக்கு மாகாணம் என்றவுடன் அரசாங்கம் நம்ப முடியாத காரணங்களை கண்டுபிடித்து சொல்கிறது.

தமிழ் பேசும் மக்களின் அதிகாரத்தின் கீழ் இந்த நாட்டில் இன்று வடக்கு, கிழக்கு மாகாண சபைகளும், வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பகுதிகளில் உள்ள உள்ளூராட்சி சபைகளும்தான் வர முடியும். தமிழ் கட்சிகளினால் கைப்பற்றப்படும் சபைகளுக்கும் முழுமையான அதிகாரங்களை தராமல், நிதி வளங்களை வழங்காமல்  அரசாங்கம் அநீதி இழைக்கின்றது.  ஆளுநர்களை வைத்து அட்டூழியம் செய்கிறது. யுத்தம் செய்த இராணுவ அதிகாரிகளின் மூலம் சிவில் நிர்வாகம் நடத்த பார்க்கிறது.

உண்மையில் வட மாகாணசபை தேர்தல் இன்று நடந்தால் அங்கு அரசாங்கம் வெற்றி பெற முடியாது என்பது உட்பட பல்வேறு ரகசிய காரணங்களே அரசாங்கத்தின் வட மாகாணசபை தேர்தல் ஒத்திவைப்பு நிலைப்பாட்டிற்கு காரணம் என்பதுவும் எங்களுக்கு தெரியும்.

அரசாங்கம் சொல்லும் கண்ணிவெடி கதையை நம்புவதற்கு நாம் தயார் இல்லை. கண்ணிவெடி காரணமாகத்தான் தேர்தல் நடத்தாமல் இருக்கின்றோம் என்று உலகத்தை நம்ப வைக்க அரசாங்கம் நடத்தும் நல்ல நகைச்சுவை நாடகம் இதுவாகும்.  இந்த நாடகத்துக்கு திரைக்கதை வசனம் எழுதியவருக்கு ஆஸ்கார் விருதையே வழங்கலாம்' என்று மனோ கணேசன் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.       
"வடமாகாண தேர்தல் தொடர்பில் அரசாங்கம் நகைச்சுவை நாடகம் போடுகிறது: மனோ " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty