புனர்வாழ்வளிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் எங்கே?: மனோ
14-05-2012 03:55 PM
Comments - 1       Views - 535
புனர்வாழ்வுக்கான பயிற்சியளிக்கப்பட்டு வெளிநாட்டு தூதுவர்கள் முன்னிலையில் பெற்றோர்களுடன் சேர்க்கப்படவுள்ளதாகக் கூறி, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி அலரி மாளிகையில் நடத்தப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்ட மூன்று இளைஞர்கள் இதுவரையில் தமது பெற்றோர்களுடன் சேர்க்கப்படவும், வீடு வந்து சேரவும் இல்லை. அவர்களை தேடித் தரும்படி குடும்பத்தவர்கள் எனது உதவியை நாடியுள்ளார்கள்.

வெளிநாட்டு பிரதிநிதிகளின் முன்னிலையில் உறுதி அளிக்கப்பட்டதை போல் அவர்கள் ஏன் பெற்றோர்களுடன் சேர்க்கப்படவில்லை? அவர்கள் இன்னமும் எங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்?
ஆகிய விபரங்களை எனக்கு உடனடியாக அறிவியுங்கள் என மக்கள் கண்காணிப்பு குழு ஏற்பாட்டாளரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான  மனோ கணேசன், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை துறை அமைச்சர் சந்திரசிறி கஜதீரவுக்கு எழுதியுள்ள அவசர கடிதத்தில் கோரியுள்ளார்.

கட்சித் தலைவர் மனோ கணேசனின் கடிதம் தொடர்பில், ஜனநாயக மக்கள் முன்னணி ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'ஒன்றுசேர்ந்து நாட்டை கட்டி எழுப்புவோம்' என்ற தொனிப்பொருளில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி, கொழும்பு அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில்  புனர்வாழ்வு பயிற்சி அளிக்கப்பட்ட 1,800 முன்னாள் போராளிகள் தங்களது பெற்றோர்களுடன் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டது.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கையிலுள்ள அமெரிக்க, இந்திய, அவுஸ்திரேலிய, பிரித்தானிய, ஜெர்மனிய, பிரான்சிய, சீன, ஜப்பானிய தூதர்கள் உட்பட பெருந்தொகையான வெளிநாட்டு பிரதிநிதிகளும், உள்நாட்டு -வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டதாக நான் அறிகிறேன்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பிலான அரசாங்கத்தின் நல்லெண்ண  நடவடிக்கையாக லண்டன் பிபிசி, சென்னை ஹிந்து  உட்பட பல்வேறு ஊடகங்கள் இந்நிகழ்வை வர்ணித்திருந்தன. சென்னை ஹிந்து பத்திரிக்கையின் ஊடகவியலாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்ட புனர்வாழ்வு பயிற்சி பெற்ற கைதிகளை புகைப்படம் பிடித்து வெளியிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில், சவரிமுத்து லோரண்டின், மோரினோ ரொக்சி, முருகேசு முருகானந்தன் ஆகிய மூன்று தடுப்பு காவல் கைதிகள் கலந்துகொண்டு, கூட்டத்தில் அமர்ந்து இருப்பதை ஊடகவியலாளர் ராதாகிருஷ்ணனின் படம் ஊர்ஜிதம் செய்கிறது. அவர்களது அடையாளங்களை அவர்களது பெற்றோர் அறிந்து வைத்துள்ளனர். ஆனாலும் சர்வதேச சமூகத்து பிரதிநிதிகளின் முன்னிலையில் உறுதி அளிக்கப்பட்டப்படி இந்த மூவரும், அவர்களது பெற்றோர் மற்றும் குடும்பத்தவர்களுடன் சேர்க்கப்படவில்லை.

பிள்ளைகளை அழைத்து செல்லுங்கள் என தமிழ் பெற்றோர்களுக்கு சொல்லப்பட்டது. ஆனால் விளம்பரப்படுத்தப்பட்டபடி இவர்கள் பெற்றோரிடம் ஒப்டைக்கப்படவில்லை. இந்த உண்மையை, நிகழ்வில் கலந்துகொண்ட அமெரிக்க, இந்திய, ஆஸ்திரேலிய, பிரித்தானிய, ஜெர்மானிய, பிரான்சிய, சீன, ஜப்பானிய தூதுவர்கள் ஏற்கனவே அறிந்து இருந்தார்களா, என்பதை தெரிந்துகொள்ள நான்  இன்று கொழும்பிலுள்ள மேற்கண்ட தூதுவர்களுடன்  தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளேன்.

உண்மையில் புனர்வாழ்வு பயிற்சி அளிக்கப்பட்ட  தடுப்பு காவல் கைதிகள் தங்களது பெற்றோர்களுடன் சேர்க்கப்படும் நிகழ்ச்சியில் வெளிநாட்டு பிரதிநிதிகளும், ஊடகவியலாளர்களும் அழைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் சம்பந்தப்பட்டவர்களது பெற்றோர்கள் அழைக்கப்படவில்லை. எனக்கு இது மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கின்றது.   
      
இந்த  இளைஞர்கள், 2008 ம் வருடம் புலிகள் இயக்கத்தால் பலவந்தமாக கடத்தி செல்லப்பட்டதாக, இவர்களது பெற்றோர் என்னிடம் தெரிவித்துள்ளார்கள். மேலும் அவர்கள் சில நாட்களின் பின் புலிகளிடமிருந்து தப்பி, ராணுவத்திடம் மன்னாரில் சரண் அடைந்ததாக கூறுகின்றார்கள். அதாவது அவர்கள்  காணாமல் போய் ஐந்து வருடங்கள் ஆகின்றன.

இந்நிலையில் நிகழ்வு சம்பந்தமான படத்தை கொழும்பு பத்திரிக்கைகளில் கடந்த வாரம் கண்ணுற்ற இந்த இளைஞர்களின் பெற்றோர் தமது பிள்ளைகளை கண்டு பிடித்து தரும்படி, மக்கள் கண்காணிப்பு ஏற்பாட்டாளர் என்ற முறையில் என்னை நாடியுள்ளனர். இந்த அப்பாவி பெற்றோர்களது துன்பங்களுக்கு பதில் தேடி தருவதற்கு நான் கடமைபட்டுள்ளேன்.

புனர்வாழ்வு பயிற்சி அளிக்கப்பட்டு பெற்றோர்களுடன் சில நாட்களில் சேர்க்கப்பட உள்ளதாககூறி  கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 30 ம் திகதி அலரி மாளிகையில் நடத்தப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்ட இந்த மூன்று இளைஞர்களும், தற்சமயம் எங்கே தடுத்து வைக்கபட்டுள்ளார்கள்  என்ற விபரங்களை  இத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற முறையில் உங்களிடம் கோருகிறேன். இதுபற்றிய விபரங்களை எனக்கு தயவு செய்து அறிவியுங்கள்.

அதேபோல் என்னிடம் முறைப்பாடு செய்துள்ள   குடும்பவத்தவருக்கு  அனாவசிய  தொந்தரவுகள் ஏற்பட வண்ணம் பாதுகாக்கும்படியும் உங்களை வேண்டி கொள்கிறேன்.
"புனர்வாழ்வளிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் எங்கே?: மனோ " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (1)
rajkamal 14-05-2012 11:10 AM
jananayaga makkal munnani udaga arikkai enru solgireergal appadiyanal
neengal solvadupol arikkai irukkinradu .
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty