"பொன்சேகாவை போன்று தமிழ் இளைஞர்களும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்"
16-05-2012 07:58 PM
Comments - 2       Views - 630
'முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படுவதை நாம் வரவேற்கின்றோம். ஆனால் அதேபோல் நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தமது வாழ்வின் பெரும்பகுதியை கழித்துவிட்ட வட - கிழக்கு, மலையக, கொழும்பு தமிழ் இளைஞர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும்' என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஆண்டாண்டு காலமாக சிறை வாழ்க்கை வாழும் தமிழர்களதும், அவர்களது குடும்ப உறுப்பினர்களதும் கண்ணீரை துடைப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஆகியோர் கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,

'சரத் பொன்சேகா சிறைக்கு போக முன், சிறை வாழ்க்கை அனுபவிக்க தொடங்கிய தமிழ் அரசியல் கைதிகள், இனி சரத் பொன்சேகா விடுதலையான பின்னரும் தொடர்ந்து சிறையில் இருக்கப்போவது, ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயம் அல்ல.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பான போராட்டங்களில் நாம் தொடர்ந்து பங்களித்துள்ளோம். இன்று அவர் விடுதலை செய்யப்படுவதற்கான சூழல் உருவாகி இருப்பதையிட்டு நாம் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் எமது மகிழ்ச்சி முழுமையானது அல்ல.

நீண்ட காலமாக கொழும்பு, கண்டி, நீர்கொழும்பு, அநுராதபுரம், யாழ்ப்பாணம், பூஸா ஆகிய சிறைக் கூடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சிறைக் கைதிகள் பிரச்சினை முற்று பெறுவதன் மூலமே அரசியல் கைதிகள் பிரச்சினை இந்நாட்டில் முழுமையாக முடிவுக்கு வர முடியும்.

சரத் பொன்சேகாவின் விடுதலைக்கு அமெரிக்க, இந்திய அரசுகளின் அழுத்தங்கள் காரணம் என சொல்லப்படுகின்றது. இந்நிலையில் தமிழ் கைதிகளின் மிக நீண்ட நாள் பிரச்சினைகளுக்கும் அமெரிக்க, இந்திய அரசுகள் உரிய அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரத்தை இந்நாடு புரிந்துகொள்ள வேண்டும். மலையகம், வட - கிழக்கு, கொழும்பு ஆகிய அனைத்து பிரதேசங்களையும் சேர்ந்த  தமிழர்கள் பலர் பயங்கரவாதத்திற்கு ஒத்தாசை புரிந்தார்கள் என்ற சந்தேகங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்களாக சிறைவாசம் அனுபவிக்கின்றார்கள். 

இவர்களில் ஒரு சிலர் மீது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பலர் தொடர்பான விசாரணைகள் முடிவடையவில்லை. இன்னும் சிலரின் வழக்குகள் நீண்ட நாட்களாக இழுத்தடிக்கப்படுகின்றன. இதில் பெண்களும் இருக்கின்றார்கள். அவர்களுக்கு பிறந்த குழந்தைகளும் சிறைவாசம் அனுபவிக்கின்றனர்.

இந்து - கிறிஸ்தவ மத துறவிகளும் இருக்கின்றார்கள். திருமணம் செய்த நிலையில் சடுதியாக கைது செய்யப்பட்டவர்களும் இருக்கின்றார்கள். பலரது இளமைகாலம் முழுக்க சிறையில் முடிந்து போயுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடுபவர்களும்  இருக்கின்றார்கள்.

இவர்கள் அனைவரையும் ஒரேயடியாக ஒரே தினத்தில் விடுதலை செய்யுங்கள் என நாம் கோரவில்லை. இவர்கள் தொடர்பில், விசேட நீதிமன்றம் அமைக்கப்பட்டு, துரித விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நீண்ட நாட்கள் சிறையில் இருந்தவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும். ஏனையோர் புனர்வாழ்வு முகாம்களுக்கு மாற்றப்பட வேண்டும். இதுவே மக்கள் கண்காணிப்பு குழுவின் கோரிக்கை.

இந்த தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அக்கறைகொள்ளும்படி எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நான் கோரியுள்ளேன். கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் இது தொடர்பில் அக்கறை காட்ட வேண்டும். பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் அரசாங்கத்திற்கு இந்த விவகாரத்தை முடிவிற்கு  கொண்டு வரும்படி கூட்டமைப்பு சொல்ல வேண்டும்.

இது தொடர்பில் உரிய அழுத்தங்களை பிரயோகிக்கும்படி நான் இன்று இலங்கையின் அமெரிக்க, இந்திய தூதுவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்' என்று அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
""பொன்சேகாவை போன்று தமிழ் இளைஞர்களும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்"" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (2)
neethan 16-05-2012 06:41 PM
மனோ கணேசனின் நியாயமான கோரிக்கையை அமுல்படுத்துவதில் இந்தியாவும் அமெரிக்காவும் அழுத்தம் கொடுப்பதுடன், புலம் பெயர்ந்து வாழும் உறவுகளும் தங்களது செயல்பாட்டை உத்வேகத்துடன் முன்னெடுக்கவேண்டும்.
Reply .
1
4
pasha 17-05-2012 03:23 AM
ஆடு அருக்ககொல்ல....
Reply .
1
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty