வட, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை ஆராய விசேட ஆணைக்குழு வேண்டும்: அ.இ.மு.கா
24-05-2012 05:23 PM
Comments - 0       Views - 371

(றிப்தி அலி)


வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்கும் படி அரசாங்கத்திடம் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் இன்று வியாழக்கிழமை கோரிக்கை விடுத்தது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் பிரச்சினைகள் முழுமையாக ஆராயப்படவில்லை எனவும் அக்கட்சி தெரிவித்தது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் கருத்துக்களை தெரிவிக்குமாறு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பில் ஆராய்வதற்காக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மூன்று சட்டத்தரணிகளை கொண்ட குழுவொன்றை அமைத்தது. அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதி தலைவர் என்.எம்.சஹீட் தலைமையிலான இக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி ஆகியோர் அங்கம் வகித்தனர்.

இக்குழுவின் கருத்துக்கள் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரத்துங்கவிடம் கையளிக்கப்பட்டது. இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் பொது செயலாளர் வை.எல்.எஸ்ஹமீட் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

"வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம்கள் 30 வருட யுத்தத்தினால் பல இழப்புக்களை சந்தித்துள்ளனர். அத்துடன் பள்ளிவாசல் உட்பட பல இடங்களில் முஸ்லிம்கள் விடுதலை புலிகளினால் கொல்லப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டவில்லை. அத்துடன் குறித்த ஆணைக்குழுவிற்காக வரையறுக்கப்பட்ட கால எல்லைக்கு முற்பட்ட காலத்திலேயே முஸ்லிம்கள் அதிக இழப்புக்களை சந்தித்துள்ளனர்.

இதனாலேயே முஸ்லிம் அரசியல் தலைவர்கள் குறித்த ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளி;க்க விரும்பவில்லை. அத்துடன் இந்த அறிக்கையில் பல விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை.

இதனால், இன விகிதாசாரத்திற்கு ஏற்ப தொழில் வழங்கல், உள்நாட்டில் இடம்பெயர்ந்த முஸ்லிம்களை மீளக்குடியேற்றல்,, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் ஏனையோரால் சுவீகரிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் காணிகளை மீளளித்தல் உள்ளிட்ட பல விடயங்களை ஆணைக்குழுவின் அறிக்கைக்கு மேலதிகமாக இணைக்க வேண்டும்.

அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்கும் படி எமது கட்சி கோரியுள்ளது" என்றார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியுதீன், தேசிய அமைப்பாளர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, சிரேஷ்ட பிரதி தலைவர் என்.எம்.சஹீட் மற்றும் தேசிய இணைப்பாளர் ஹுனைஸ் பாரூக் ஆகியோர் கலந்துகொண்டனர். (படங்கள்: நிசால் பதுகே)


"வட, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை ஆராய விசேட ஆணைக்குழு வேண்டும்: அ.இ.மு.கா" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty