40 இலங்கையர்களைக் கொண்ட படகு அவுஸ்திரேலிய கொகோஸ் தீவை அடைந்தது
31-05-2012 02:00 PM
Comments - 0       Views - 489
புகலிடம் தேடும் இலங்கையர்கள் 40 பேரைக் கொண்ட படகொன்று அவுஸ்திரேலியாவின் கொகோஸ்தீவை செவ்வாய்க்கிழமை இரவு அடைந்துள்ளது. இவ்வாரம் அவுஸ்திரேலிய கடற்பரப்பை அடைந்த இரண்டாவது அகதிகள் படகு இதுவாகும்.

கொகோஸ் தீவானது அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் மத்தியில் இருநாடுகளிலிருந்தும் 3000 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 27 தீவுகளைக் கொண்ட இத்தீவுக்கூட்டத்தில் பெரும்பாலும் மனிதர்கள் வசிப்பதில்லை.

அங்கு படகில் வந்தவர்களை கொகோஸ் கழகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் வருகையினால்  இத்தீவின் தொண்டர்கள், பல்பொருள் அங்காடிகள், சமூக சேவகர்கள், கழங்கள் மீதான அழுத்தம் அதிகரிக்கும் என தன்னை இனம்காட்ட விரும்பாத உள்ளூர்வாசியொருவர் தெரிவித்துள்ளார்.

திடீர் சனத் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப, இத்தீவில் போதிய விநியோகங்கள், வழங்கள் இல்லையென உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

தொண்டர்கள் தமது ஏனைய தொழில்களைவிட்டுவிட்டு, இவர்களுக்கு தொண்டாற்ற வேண்டியிருக்கும் என அவர் கூறியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை படகில் சென்றவர்களைத் தவிர, இவ்வருடம் அவுஸ்திரேலியாவை அடைந்த புகலிடம் தேடுவோரின் எண்ணிக்கை 576 ஆக அதிகரித்துள்ளது. கடந்த வருடம்  211இலங்கையர்கள் புகலிடம் தேடி அவுஸ்திரேலியாவுக்குச் சென்றனர்.

அகதிகளின் வருகை அதிகரிப்பானது இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறையை பிரதிபலிக்கிறது என அவுஸ்திNலிய தமிழர் காங்கிரஸ் பேச்சாளர் சாம் பெரி கூறியுள்ளார்.
'எமது வாசற்படியிலுள்ள மனிதாபிமான பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என அவுஸ்திரேலியா விரும்புகிறது. இலங்கை மீது ராஜதந்திர அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என நாம் விரும்புகிறோம்.

மென்மையான அனுகுமுறை செயற்பட மாட்டாது. இலங்கை மீது அவுஸ்திரேலியா  ராஜதந்திர அழுத்தத்தை பிரயோகிக் வேண்டிய தருணம் இது' என அவர் கூறினார்.


"40 இலங்கையர்களைக் கொண்ட படகு அவுஸ்திரேலிய கொகோஸ் தீவை அடைந்தது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty