அமைச்சர் சம்பிக்கவின் பேச்சை கட்டுப்படுத்த வலியுறுத்தி கருணாநிதி கடிதம்
20-06-2012 08:03 PM
Comments - 0       Views - 637
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனின் பேச்சை விமர்சித்து அமைச்சர் சம்பிக்க ரணவக்க வெளியிட்டிருந்த கருத்துக்கு தி.மு.க. தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், அமைச்சரின் கருத்து தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேசி அவர்களின் பேச்சினைக் கட்டுப்படுத்துமாறும் தமிழர்கள் விடயத்தில் இலங்கை எத்தகைய கடுமையான நிலையை எடுத்துள்ளது என்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பார்வைக்கும் கொண்டு செல்லுமாறும் வலியுறுத்தி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருணாநிதி கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

இது தொடர்பில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன், கடந்த மாதம் மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் 14ஆவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது 'வடக்கு - கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பாரம்பரிய நிலம் என்பதை உறுதிப்படுத்தியாக வேண்டும்' என்பதை வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், சம்பந்தனின் கருத்துக்கு பதிலளித்துள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்க, 'சம்பந்தனின் பேச்சு மீண்டும் சிங்களவர்களை சண்டைக்கு இழுப்பதாக உள்ளது. அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு பேசுவது தொடர்ந்தால் இன்னும் நூறு முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நீங்கள் சந்திக்க நேரிடும்' என்று கூறியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் துயரத்துக்குப் பிறகு வட இலங்கையில் தமிழர் நிலங்கள் இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ளன. தங்கள் பூர்வீக வீடுகள், நிலங்களை இழந்த தமிழ் மக்கள், இப்போது அறவழிப் போரில் மீண்டும் குதித்துள்ளனர். அதற்கேற்ப யாழ்ப்பாணத்தின் தெல்லிப்பளை பிரதேசத்தில் நேற்று காலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் கலந்துகொண்டு திரும்பிய பொதுமக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
 
அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் பேச்சு, இலங்கையில் எத்தகைய சூழலில் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பதை உலகுக்கு பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. மேலும் சிங்கள இனவாதத்தின் உச்சமாகவும் கருதப்படுகிறது. அவரது இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கின்றேன். அவரின் பேச்சு கடுமையாக கண்டிக்கத்தக்கது. இது வன்முறையைத் தூண்டிவிடும் வகையில் அமைந்துள்ளது.

எனவே இந்த விவகாரத்தை இலங்கை அரசிடம் கொண்டு சென்று இதுபோன்று பேசுவதைக் கட்டுப்படுத்துமாறு இந்தியா அறிவுறுத்த வேண்டும். மேலும் தமிழர்கள் விடயத்தில் இலங்கை எத்தகைய கடுமையான நிலையை எடுத்துள்ளது என்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பார்வைக்கும் கொண்டு செல்ல வேண்டும். தமிழர் வாழ்வுரிமை காப்பாற்றப்பட வேண்டும்' என்று கருணாநிதி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.(தட்ஸ்தமிழ்)
"அமைச்சர் சம்பிக்கவின் பேச்சை கட்டுப்படுத்த வலியுறுத்தி கருணாநிதி கடிதம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty