யுத்த நாடாக விளங்கிய இலங்கை இன்று ஆகக்கூடிய பாதுகாப்பு கொண்ட உறுதியான நாடாக விளங்குகிறது: கோட்டாபய ராஜபக்ஷ
08-08-2012 10:31 PM
Comments - 0       Views - 507

(எம்.மேனகா, சுபுன் டயஸ்)


யுத்த நாடாகக் காணப்பட்ட இலங்கை, இப்போது ஆகக்கூடிய பாதுகாப்பு கொண்ட உறுதியான நாடுகளில் ஒன்றாக விளங்குகின்றது' என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கையின் யுத்த வெற்றி அனுபவத்தை சர்வதேச நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளும் 'இராணுவ கருத்தரங்கு 2012', இன்று புதன்கிழமை கொழும்பில் ஆரம்பமானது.

'நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கி' எனும் தொனிப்பொருளில் கொழும்பு கலதாரி ஹோட்டிலில் இன்று ஆரம்பமான இக்கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்பு செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் பாதுகாப்பு செயலாளர் கூறுகையில்,

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் உட்கட்டுமான அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. இராணுவம் ஆறாயிரம் வீடுகளையும் ஏழாயிரம் அரை நிரந்தர வீடுகளையும் புனரமைத்துள்ளது.

இதைவிட பல பாடசாலைகளையும் விளையாட்டிடங்களையும் புனரமைத்துக் கொடுத்துள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளால் இராணுவம் மக்களின் இதயத்தை வென்றுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள், தமது வன்முறை நடவடிக்கைகளை தற்போது துறந்துவிட்டனர் என பொதுவாக ஏற்கப்பட்டுள்ளது. இவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் தவறாக வழிநடத்தப்பட்டவர்கள் என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விளக்கிக் கூறியுள்ளார்.

தற்போது நல்லிணக்கம் பற்றி பரவலாகப் பேசப்படுகின்றது. சமூகத்தின் சகல பிரிவினருக்கும் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடிக்குள் இருந்தவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நாட்டில் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சொதனைச் சாவடிகள் காணப்பட்டன. இப்போது ஐம்பதிலும் குறைவான சோதனைச்சாவடிகளே உள்ளன.

யுத்தம் முடிவடைந்ததை அடுத்து வடக்கிலிருந்து 29 படையணிகள் கிழக்கிற்கும் தெற்கிற்கும் நகர்த்தப்பட்டுள்ளன. ஆயினும், வடக்கில் பிரதானமாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இராணுவத்தை நிறுத்துவது பாதுகாப்புக்கு அவசியமானது.

வடக்கில் இன்னமும் 5000 கிலோமீற்றர் சதுர நிலப்பரப்பில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டும். நிலக்கண்ணிவெடி அகற்றல் மற்றும் புனரமைப்பு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை, பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்த 10965 முன்னாள் போராளிகளில் 636பேர் மாத்திரமே தற்போது புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். ஏனையோர் புனர்வாழ்வுக்கு பின் தத்தமது குடும்பங்களுடன் இணைந்துள்ளனர்.

எஞ்சியுள்ளவர்களில் 383பேர் யுத்தத்தின் போது புலிகள் இயக்கத்தில் பாரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன' என்றார். (படங்கள் - இந்திரரத்ன பாலசூரிய)


"யுத்த நாடாக விளங்கிய இலங்கை இன்று ஆகக்கூடிய பாதுகாப்பு கொண்ட உறுதியான நாடாக விளங்குகிறது: கோட்டாபய ராஜபக்ஷ" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty