டில்ருக்ஷன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானதாகும்: ஜயலத் எம்.பி.
08-08-2012 09:44 PM
Comments - 0       Views - 435
வவுனியா சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற அமைதியின்மை சம்பவத்தின் பின்னர் தாக்கப்பட்டு, கடுமையான காயங்களுடன் கோமா நிலையில் ராகம வைத்தியசாலையில் நேற்றிரவு உயிரிழந்த டில்ருக்ஷன் மரியதாஸின் உயிரிழப்பு சம்பவமானது மிகவும் காட்டுமிராண்டிதனமானது. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு, இச்சம்பவத்திற்கு மிகுந்த கவலையையும் தெரிவிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாக டாக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவையாவன...

வவுனியா சிறைச்சாலை சம்பவத்தை அடுத்து தாக்கப்பட்டு, கடந்த சில வாரங்களாக கோமா நிலையில் ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த டில்ருக்ஷன் மரியதாஸ் உயிரிழந்தமை எனக்கு மிகுந்த வேதனையளிக்கின்றது. உண்மையில் மரியதாஸ் சிறைச்சாலையில் இருந்த போது மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அவர் உயிரிழக்கும்வரை கோமா நிலையில் இருந்துள்ளதுடன், அந்த நிலைமையிலும் அவருக்கு விலக்கிடப்பட்டிருந்தமை கவலைக்குரியதாகும். அவர் வைத்தியசாலையில் இருந்தபோது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அவரை பார்த்து நலம் விசாரிப்பதற்குக்கூட அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. அத்துடன் அவரை பார்க்கச் சென்ற நான் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அதிகாரிகள் தடுத்தனர்.

சிறைக்கைதிகளும் மனிதர்களே என்ற இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் தொனிப்பொருளை இன்று அந்த திணைக்கள அதிகாரிகளே பிரசித்தமாக மீறுகின்றனர். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து இன்று நாடாளுமன்றில் நடந்த சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் ஆலோசனை தெரிவுக்குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவித்தேன்.

கடந்த ஜூலை மாதம் 27ஆம் திகதி இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்து கோமா நிலையில் ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவரையும், வவுனியா சிறைச்சாலையிலிருந்து மஹர சிறைக்கு மாற்றப்பட்ட ஏனைய தமிழ்க் கைதிகளையும் சந்தித்து ஆசிர்வதிக்க நான் அழைத்துச் சென்ற மன்னார் ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களையும் சிறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. மேலும் இன்று துரதிர்ஷ்டவசமாக உயிர் நீத்த மரியதாஸின் இறுதிக் கிரியைகளில் ஜெபம் மற்றும் ஆசிர்வாதம் செய்வதற்கும் மன்னார் ஆயருக்கு முடியாமல் போனதை இட்டு நான் மனவருத்தம் அடைகின்றேன்.

இது தொடர்பில் இன்று இடம்பெற்ற சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் ஆலோசனை தெரிவுக் குழுக் கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட சம்பவம் குறித்து சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பி.டபிள்யூ. கொடிப்பிலிக்கு அனுப்பி வைத்த கடிதத்தின் பிரதி ஒன்றை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவிடம் கையளித்தேன்.

மேலும் பிறந்த பூமியிலேயே மரியதாஸின் இறுதிக் கிரியைகளை மேற்கொள்ள அதிகாரிகள் அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன். மேலும் எங்களிடம் இருந்து விலகிய டில்ருக்ஷன் மரியதாஸின் ஆன்மா சாந்தியடைய நான் பிரார்த்திக்கின்றேன்.
"டில்ருக்ஷன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானதாகும்: ஜயலத் எம்.பி." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty