டெல்லி டெயாடெவில்ஸ் இலகுவான வெற்றி
20-05-2012 08:33 AM
Comments - 0       Views - 229
இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் 69ஆவது போட்டியில் டெல்லி டெயாடெவில்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது. கிங்ஸ் லெவின் பஞ்சாப் அணிக்கெதிராக இடம்பெற்ற இப்போட்டியில் டெல்லி டெயாடெவில்ஸ் அணி 10 பந்துகள் மீதமிருக்க 6 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.

தர்மசாலாவிலுள்ள கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி டெயாடெவில்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. டெல்லி டெயாடெவில்ஸ் அணியின் வழக்கமான அணித்தலைவரான விரேந்தர் செவாக் தொடர்ந்தும் காயமடைந்துள்ள நிலையில் டெல்லி டெயாடெவில்ஸ் அணியின் தலைவராக மஹேல ஜெயவர்தன இப்போட்டியிலும் பங்குபற்றினார்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் லெவின் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 141 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணியின் முதல் 4 விக்கெட்டுக்களும் 20 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட அவ்வணி கடுமையான தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

பின்வரிசை வீரர்களின் ஓரளவு சிறப்பான ஆட்டத்தின் காரணமாக அவ்வணி ஓரளவு போட்டித்தன்மையான ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் கிங்ஸ் லெவின் பஞ்சாப் அணி சார்பாக சித்தார்த் சிட்டின்ஸ் 32 பந்துகளில் 38 ஓட்டங்களையும், அஷார் மஹமூட் 38 பந்துகளில் 36 ஓட்டங்களையும், குர்கிறீட் சிங் 11 பந்துகளில் 26 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் டெல்லி டெயாடெவில்ஸ் அணி சார்பாக மோர்னி மோக்கல் 4 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், உமேஷ் யாதவ் 4 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், அன்ட்ரே ரசல் 4 ஓவர்களில் 51 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

142 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய டெல்லி டெயாடெவில்ஸ் அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அவ்வணியின் சார்பாக முதலாவது விக்கெட்டுக்காக 9 ஓவர்களில் 82 பகிரப்பட்டதன் காரணமாக டெல்லியின் துடுப்பாட்டம் இலகுவாக்கப்பட்டது.

துடுப்பாட்டத்தில் டெல்லி டெயாடெவில்ஸ் அணி சார்பாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் டேவிட் வோணர் 44 பந்துகளில் 79 ஓட்டங்களையும், வேணுகோபால் ராவோ 19 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் கிங்ஸ் லெவின் பஞ்சாப் அணி சார்பாக றயன் ஹரிஸ் 4 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், அஷார் மஹமூட் 3.2 ஓவர்களில் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக டெல்லி டெயாடெவில்ஸ் அணியின் டேவிட் வோணர் தெரிவானார். (க்ரிஷ்)
"டெல்லி டெயாடெவில்ஸ் இலகுவான வெற்றி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty