பாகிஸ்தான் வீரர்களுக்கு ஊதிய உயர்வு
24-05-2012 02:52 PM
Comments - 0       Views - 332
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் பாகிஸ்தான் வீரர்களுக்கான ஒப்பந்தம் வழங்கப்படும் போதே இந்த ஊதிய உயர்வு வழங்கப்படவுள்ளது. இவ்வீரர்களுக்கு 15 தொடக்கம் 25 சதவீதம் வரையிலான ஊதிய உயர்வு வழங்கப்படவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்தோடு போட்டி ஊதியங்களும் 10 தொடக்கம் 25 சதவீதத்தால் அதிகரிப்படுவதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்த கிரிக்கெட் சபை அதிகாரியொருவர், ஆகவே வீரர்களுக்கு இவ்வாண்டு ஒப்பந்தத்தில் ஏராளமான நன்மைகள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

தேசிய ஒப்பந்தம் மற்றும் தொடர்புரிமை ஒப்பந்தம் ஆகியவற்றைப் பெறவுள்ள வீரர்களின் பட்டியல் இவ்வாரத்தில் வெளியிடப்படும் என்பதை உறுதிப்படுத்திய அந்த அதிகாரி, இலங்கைச் சுற்றுலாவிற்காக பாகிஸ்தான் அணி இலங்கைக்குப் புறப்பட முன்னர் இந்தப் பட்டியலை அறிவிப்பதில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உறுதியாகக் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

கிட்டத்தப்பட்ட 30 தொடக்கம் 32 வரையிலான வீரர்கள் தேசிய மத்திய ஒப்பந்தம் மற்றும் தொடர்புரிமை ஒப்பந்தங்களைப் பெறவுள்ளதாகத் தெரிவித்த கிரிக்கெட் சபை வட்டாரங்கள், புதிய ஒப்பந்தம் பட்டியல் இலங்கைக்குச் செல்லும் வீரர்களை அழைந்து சந்திப்பு நிகழ்வொன்றில் வைத்து அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தன.

கடந்த வருடத்தின் இரண்டாம் பாதியில் ஒப்பந்தத்தைக் கொண்டிராத வீரர்களான ஷகிட் அப்ரிடி, சொயிப் மலிக் ஆகியோருக்கு இவ்வாண்டு ஒப்பந்தம் வழங்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்படும் அதேவேளை, கமரன் அக்மல், அப்துல் ரஷாக் ஆகியோருக்கு ஒப்பந்தம் வழங்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் வீரர்களுக்கான ஆண்டு ஒப்பந்தம் கடந்த டிசெம்பர் 31ஆம் திகதி நிறைவடைந்திருந்த போதிலும் பல்வேறு காரணங்களினால் இதுவரை புதுப்பிக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (க்ரிஷ்)
"பாகிஸ்தான் வீரர்களுக்கு ஊதிய உயர்வு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty