இந்தியாவிற்கெதிரான தொடர்: 3 முன்மொழிவுகளை பாக். கிரிக்கெட் சபை முன்வைப்பு
12-07-2012 09:51 PM
Comments - 0       Views - 273
இந்திய - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் உறவுகளை மீளவும் கட்டியெழுப்பும் முகமாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் முயற்சிகளில் அடுத்த கட்டமாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை 3 வகையான முன்மொழிவுகளை இந்தியக் கிரிக்கெட் சபையிடம் முன்வைத்துள்ளது. இந்தத் தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் ஷாகா அஷ்ரப் உறுதிப்படுத்தினார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தகவலின் படி இந்திய அணி - பாகிஸ்தானுக்குப் பயணம் செய்வது, இந்திய அணி - ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற நடுநிலையான நாட்டிற்குச் சென்று பங்குபெறுவது, இந்தியாவிற்குப் பாகிஸ்தான் அணி செல்வது ஆகிய 3 வகையான முன்மாழிவுகளை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முன்வைத்துள்ளது.

இது அடிப்படையான முன்மொழிவு மாத்திரமே எனத் தெரிவித்த ஷாகா அஷ்ரப், இந்தியக் கிரிக்கெட் சபை இதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு முன்வருமாயின் இலாபங்களைப் பகிருதல் உட்பட்ட ஏனைய விடயங்களை ஆராயத் தயாராகவுள்ளதாகத் தெரிவித்தார்.

இத்தொடரை இந்தியாவின் தொடராக நடாத்த விரும்பினால் இந்தியாவிற்குச் சென்று போட்டிகளில் பங்குபற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தயாராகவுள்ளதாகத் தெரிவித்த அவர், இத்தொடரை பாகிஸ்தானின் தொடராக பாகிஸ்தானுக்கு வழங்கினால் அந்தத் தொடரை ஏற்பாடு செய்வதற்குப் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தயாராகவுள்ளதாகத் தெரிவித்தார்.

2008ஆம் ஆண்டு இந்தியாவின் மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திர தாக்குதலை அடுத்து இரு நாடுகளிடையிலான அரசியல் உறவுகள் மாத்திரமன்றி, விளையாட்டு உறவுகளும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
"இந்தியாவிற்கெதிரான தொடர்: 3 முன்மொழிவுகளை பாக். கிரிக்கெட் சபை முன்வைப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty