ரோயல் சலஞ்சர்ஸ் வீரர்களுக்கு ஊதியம் இன்னும் இல்லை
13-07-2012 03:03 PM
Comments - 0       Views - 221
ஐ.பி.எல். அணியான ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சார்பாக இந்தப் பருவகாலத்தில் போட்டிகளில் பங்குபற்றிய முன்னணி இந்திய, வெளிநாட்டு வீரர்களுக்கான ஊதியங்கள் இன்னமும் வழங்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு தாமதம் குறித்து வீரர்களுக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நியூசிலாந்தைச் சேர்ந்த டானியல் விட்டோரி, அன்ட்ரூ மன்டொனால்ட் உட்பட வீரர்கள் பலருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அத்தோடு பயிற்றுவிப்பாளர்கள், பயிற்றுவிப்புக் குழுவினர் பலருக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது.

ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் உரிமையாளரான விஜய் மல்லையாவின் நிறுவனம் கடனில் சிக்கிக் காணப்படும் நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே விஜய் மல்லையாவின் விமான சேவையான கிங் பிஷர்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததன் காரணமாக விமானமோட்டிகள் சேவையில் ஈடுபட மறுப்புத் தெரிவித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீரர்களுக்கான ஊதியம் தாமதப்படுவது ஒருபுறமிருக்க, தாமதப்படுவது குறித்து அணி நிர்வாகத்திற்கும், அணியின் பணிப்பாளரும் விஜய் மல்லையாவின் மகனுமான சித்தார்த் மல்லையாவிற்கும் அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களுக்கு பதில்கள் கிடைக்கப் பெறவில்லை எனவும், அதுவே வீரர்களை அதிகம் பாதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐ.பி.எல். ஒப்பந்தத்தின் படி ஒரு வீரரின் ஊதியத்தின் 15 சதவீதம் ஏப்ரல் முதலாம் திகதிக்கு முன்னதாகவும், மே முதலாம் திகதிக்கு முன்னதாக 50 சதவீதமும், 20 சதவீதம் சம்பியன்ஸ் லீக் தொடருக்குப் பின்னதாகவும், மிகுதி 15 சதவீதமும் டிசெம்பர் முதலாம் திகதிக்கு முன்னதாகவும் வழங்கி முடிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
"ரோயல் சலஞ்சர்ஸ் வீரர்களுக்கு ஊதியம் இன்னும் இல்லை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty