கனேரியாவின் வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உன்னிப்பாக அவதானிப்பு
31-08-2012 04:55 PM
Comments - 0       Views - 209
ஸ்பொட் ஃபிக்சிங் வழக்கில் சிக்கித் தடை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் டனிஷ் கனேரியாவின் வழக்கை உன்னிப்பாக அவதானித்து வருவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. டனிஷ் கனேரியாவின் மேன்முறையீடு தொடர்பாக உன்னிப்பாக அவதானித்து வருவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தின் பிராந்திப் போட்டிகளில் பங்குபற்றிய போது ஸ்பொட் ஃபிக்சிங்கில் ஈடுபடுவதற்குத் தனது சக வீரரான மேர்வின் வெஸ்ட்ஃபீல்டை தூண்டியடைக்காகவும், சூதாட்டக் காரரிடம் அவரை அறிமுகப்படுத்தியமைக்காகவும் இங்கிலாந்துக் கிரிக்கெட் சபை டனிஷ் கனேரியாவை ஆயுட்காலத் தடைக்குட்படுத்தியிருந்தது.

குறித்த தடைக்கெதிரான டனிஷ் கனேரியா மேன்முறையீடு செய்திருந்த நிலையில், அதற்கான விசாரணைகள் இடம்பெறவுள்ளன. மேன்முறையீட்டுக்கான விசாரணைத் திகதிகள் இன்னமும் வழங்கப்படாத நிலையில் அதற்காக டனிஷ் கனேரியா காத்திருக்கிறார்.

இந்நிலையில் இந்நிலைமை குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, டனிஷ் கனேரியா விடயத்தை அவ்வாறு விட்டுவிடவில்லை எனவும், அவரது வழக்குத் தொடர்பாக உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தங்களது கவனத்தைச் செலுத்தவில்லை எனத் தெரிவிக்க முடியாது எனவும் அச்சபை தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் டனிஷ் கனேரியா இங்கிலாந்தில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய பாகிஸ்தான் கிரிக்கெட், அதன் காரணமாக சர்வதேசக் கிரிக்கெட் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகள் என்ற வகையில் ஏனைய நாடுகளும் அவருக்குத் தடை விதித்துள்ளதாகவும், தாங்கள் இன்னமும் அவரைத் தடை விதிக்கவில்லை எனவும், இடைக்காலத் தடையே விதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
"கனேரியாவின் வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உன்னிப்பாக அவதானிப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty