எதிர்கால அணியுடன் தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி
10-09-2012 07:53 PM
Comments - 0       Views - 772
இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி தொடர் நிறைவடைந்துள்ளது. எதிர்பார்க்கப்பட்டது போலவே இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை தனதாக்கியுள்ளது. தொடர் டெஸ்ட் தோல்விகள், பின்னடைவுகள், டிராவிட், லக்ஸ்மன் ஆகியோரின் ஓய்வு என்பனவற்றிக்கு பின்னர் இந்த தொடர் வெற்றியானது இந்திய அணிக்கு ஆறுதல் அழிப்பதாக இருந்தது. ஆனாலும் பலமிழந்து தடுமாறி வரும் நியூசிலாந்து அணியை இந்தியாவில் வைத்து வெற்றி பெற்றது அவ்வளவு பெரிய விடயம் இல்லை என்றாலும் அணியை மீள் கட்டி எழுப்ப இந்த வெற்றி கை கொடுக்கும். இள வயது வீரர்கள் உள்வாங்கப்படுள்ள நிலையில் அவர்கள் எல்லோரும் செய்து காட்டி இருப்பது அணிக்குள் ஏற்ப்பட்ட இடத்தை நிரப்பியுள்ளது. குறிப்பாக புஜாரா, ரெய்னா ஆகிய இருவரும் துடுப்பாட்டங்களை செய்து காட்டி அணிக்குள் நிரந்தர இடம் பிடிக்கக் கூடிய வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளனர். விராத் கோலி - டெஸ்ட் போட்டிகளில் நல்ல ஆரம்பத்தை எடுத்துள்ள போதும் இன்னும் கொஞ்சம் செய்து காட்ட வேண்டும் என்ற நிலையில் முழுமையாக தன்னை நிரூபித்து காட்டி விட்டார். பந்து வீச்சில் சுழல்ப்பந்து வீச்சாளர்கள் அஷ்வின், ஓஜா இருவரும் மிக அபாரமாக சாதித்து காட்டிவிட்டனர். இந்திய அணியின் முதன்மை சுழல்ப்பந்து வீச்சாளராக அஷ்வின் மாறிவிட்டார். உமேஷ் யாதவ் மட்டுமே இன்னும் செய்து காட்ட வேண்டும் என்ற நிலையில் தொடர்கின்றார். இந்தியாவின் வேகமான பந்து வீச்சாளர் என்ற காரணத்தினால் அவருக்கு இன்னும் கொஞ்சம் வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர் பார்க்கமுடியும். சச்சின் ஓட்டங்களை பெற தடுமாறுகிறார். அவர் ஓய்வு பெற வேண்டும் என்ற முணு முணுப்புக்கள் குறைவாக இருந்தாலும், இந்த தொடரின் பின் அதிகரிக்கத்தான் செய்கின்றன. மோசமான பெறுபேறுகளைக் காட்டிய துடுப்பாட்ட வீரர் அவரே. அடுத்த தொடர் கடைசி தொடராக இருக்கும் என பேச்சுக்கள் எழும்பினாலும், சச்சின் இப்போதைக்கு தான் ஓய்வுபெறப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

மறு புறத்தில் நியூசிலாந்து அணி தொடர்ச்சியாக பின்னடைவுகளைக் காட்டி வருகிறது. முதற்ப் போட்டியில் மிக மோசமாக விளையாடிய நியூசிலாந்து அணி, இரண்டாவது போட்டியில் ஓரளவு சிறப்பாக விளையாடியது. இந்திய அணியை தடுமாற வைத்தது. முக்கிய காரணம் ரொஸ் ரெயிலரின் துடுப்பாட்டம் மற்றும் ரிம் சௌதியின் பந்துவீச்சு. முதல் இன்னிங்ஸில் சிறப்பாக செயற்பட்ட போதும் இரண்டாம் இன்னிங்ஸில் சொதப்பி விட்டனர். நியூசிலாந்து அணி தன்னை இன்னும் சரியாக அமைக்க தடுமாறுகின்றனர். பந்துவீச்சு, துடுப்பாட்டம் என இரு பக்கமும் சரியாக அமைக்க முடியாமல் கஷ்டப்படுகிறது. ஆனாலும் இரண்டாவது போட்டியில் விளையாடியவிதம் குறிப்பாக முதல் இன்னிங்ஸில் விளையாடிய விதம் அவர்கள் இந்த அணியை வைத்து இன்னும் மேம்படுத்தலாம் என்பது தெரிகிறது. ஒருமித்து எல்லோரும் செயற்படுவது மிகக் குறைவு. அதுதான் நியூசிலாந்து அணியின் பெரிய பிரச்சினை.

முதற்ப்போட்டியில் இந்திய அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி
முதற்ப் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்திய அணிக்கு இலகுவான இன்னிங்ஸ் வெற்றி கிடைத்தது. ஓர் இன்னிங்ஸ் மற்றும் 15 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சகல விக்கெட்களையும் இழந்து 438 ஓட்டங்களைப் பெற்றது. 134.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளும் வீழ்த்தப்பட்டன. கூடுதலான ஓட்டங்களான 159 ஓட்டங்களை செற்றேஸ்வர் புஜாரா பெற்றுக் கொண்டார். மீள் வருகைப்போட்டி. சாதித்துக் காட்டி இந்தியாவின் சுவர் ராகுல் டிராவிட் விட்டுச் சென்ற இடத்தை பிடித்துக் கொண்டார். நம்பிக்கையான எதிர்கால வீரர் என்ற பெயரை ஏற்கனவே வைத்து இருந்தவர். சிறப்பாக மீள் வருகையை காட்டி உள்ளார். இதை தொடர வேண்டும். இப்போதைக்கு முழுமையாக இடம் பிடித்து விட்டார் என்று சொல்ல முடியாது. அணித்தலைவர் டோனி 73 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். விராத் கோலி 58 ஓட்டங்கள். கோலி ஒவ்வொரு போட்டியிலும் தன்னை மிக இறுக்கமாக அணிக்குள் நிலை நிறுத்தி வருகிறார். டெஸ்ட் போட்டிகளிலும் முழு நிரந்தர இடம் பிடித்துவிட்டார். பந்துவீச்சில்  நியூசிலாந்து அணி சார்பாக ஜீதன் பட்டேல் 4 விக்கெட்கள். ட்ரென்ட் பௌல்ட் 3 விக்கெட்கள்.

தங்கள் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 159 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சகல விக்கெட்களையும் இழந்துள்ளது. 61.3 ஓவர்களில் சகல விக்கெட்களும் வீழ்த்தப்பட்டன. அஷ்வின், ஓஜா ஆகியோர் நியூசிலாந்து அணியை சுழற்றி விட்டனர். அஷ்வின் 31 ஓட்டங்களிற்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார். இரண்டாவது 6 விக்கெட் பெறுதி. இதுவே அவரின் சிறந்த பந்து வீச்சு பெறுதி. ஓஜா 3 விக்கெட்கள். அடுத்த இன்னிங்ஸை நியூசிலாந்து தொடர்ந்தது. இந்தமுறையும் முதல் இன்னிங்ஸ் போலவே இரண்டு சுழல்ப் பந்து வீச்சாளர்களும் சுருட்டி விட்டனர். அஷ்வின் மூன்றாவது 6 விக்கெட் பெறுதியைப் பெற்றுக் கொண்டார். ஓஜா 3 விக்கெட்கள். இந்திய அணி வெற்றி பெற்றது. 12 விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்ட அஷ்வின் போட்டியின் நாயகனாக தெரிவு செய்யப்பட்டார். ஒரு போட்டியின் சிறந்த பந்துவீச்சு பெறுதியையும் அவர் பெற்றுக் கொண்டார். இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட தொடரில் முன்னிலை பெற்றுக் கொண்டது.

நியூசிலாந்து அணியின் ஆதிக்கத்தை உடைத்து இந்திய அணி வெற்றி பெற்றது
பெங்களூர் சின்னசுவாமி மைதனாத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. 365 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது நியூசிலாந்து அணி. ரொஸ் ரெய்லர் 113 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். சிறப்பான சதம். வேகமாகவும் கூட அடிக்கப்பட்டது. 127 பந்துகளில் இந்த சதம் அடிக்கப்பட்டது. விக்கெட் காப்பாளர் ரூகர் வன் வைக் பின் வரிசை வீரகளுடன் இணைந்து நல்ல முறையில் துடுப்பெடுத்தாடினார். 71 ஓட்டங்களை அவர் பெற்றுக் கொண்டார். ஆரம்பத்தில் மார்டின் கப்டில் 53 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். டக் பிரஸ்வெல் 43 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இவர்களின் துடுப்பாட்டம் நியூசிலாந்து அணிக்கு மீள் வருகையை தந்தது. பந்து வீச்சில் பிரக்ஜன் ஓஜா ஐந்து விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார். சகீர் கான் 2 விக்கெட்கள்.

பதிலளித்த இந்திய அணி ஆரம்ப விக்கெட்களை வேகமாக இழக்க பலோ ஒன்னை தாண்டுமா என்ற சந்தேகம் நிலவ விராத் கோலியின் துடுப்பாட்டம் இந்திய அணிக்கு பெரிதும் கை கொடுத்தது. அவர்களுடன் இணைந்து ரெய்னா, டோனி ஆகியோருடைய துடுப்பாட்டம் கை கொடுக்க இந்திய அணி நியூசிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு கிட்ட செல்ல முடிந்ததே தவிர தாண்ட முடியவில்லை. 353 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பந்து வீச்சில் ரிம் சௌதி மிக அபாரமாக பந்து வீசி இந்திய அணியை தடுமாற வைத்தார். அவரின் சுவிங் பந்துகள் இந்திய அணியின் விக்கெட்களை பதம் பார்த்தன. 7 விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார். இதுவே அவரின் சிறந்த பந்து வீச்சு பெறுதி. டௌக் பிரஸ்வெல் 2 விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார்.

இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 248 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அஷ்வினின் பந்து வீச்சு நியூசிலாந்து அணியை தடுமாற வைத்தது. எந்த வீரரும் 50 ஓட்டங்களை தொடவில்லை. கூடுதலான 41 ஓட்டங்களை ஜேம்ஸ் பிராங்ளின் பெற்றுக் கொண்டார். அஷ்வின் 5 விக்கெட்கள். உமேஷ் யாதவ், பிரக்ஜன் ஓஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்கள். அஷ்வின் இந்திய சாதனை ஒன்றை நோக்கி செல்கிறார். இதுவரையில் 8 போட்டிகளில் 49 விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார். வேகமான 50 விக்கெட்களைக் கைப்பற்றிய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனை நிச்சயம் கிடைக்கும். உலகளாவிய ரீதியிலும் கூட முதல் 10 பேருக்குள் வர வாய்ப்புக்கள் உள்ளன.

இந்திய அணி அணில் கும்ப்ளேயின் பின் ஒரு நல்ல சுழல்ப்பந்து வீச்சாளரை தேடி வருகிறது. ஹர்பஜன் சிங்க் ஆரம்பத்தில் சிறப்பாக செயற்பட்டாலும் பின் தொடர முடியாமல் அஷ்வினிடம் இடத்தை பறி கொடுத்தார். அஷ்வின் கிடைத்த இடத்தை சரியாக பிடித்துக் கொண்டார். தமிழ் நாட்டில் இருந்து வெங்கட் ராகவனிற்கு பின் ஒரு சிறந்த பந்து வீச்சாளர் இந்திய அணியில் இணைந்துள்ளார். வெங்கட் ராகவன்தான் இந்திய அணியில் கூடிய காலம் விளையாடிய தமிழ் வீரர். அஷ்வினுக்கு இப்போது அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. சொதப்பாமல் செய்தால் தொடரலாம்.

261 ஓட்டங்களுடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நல்ல ஆரம்பத்தை எடுத்த போதும் பின்னர் விக்கெட்கள் வேகமாக வீழ்த்தப்பட வெற்றி பெறுமா என்ற கேள்வி எழும்பியது, முதல் இன்னிங்ஸில் இந்திய அணிக்கு கை கொடுத்த விராத் கோலி, டோனி ஜோடி கை கொடுக்க இந்திய அணி வெற்றி பெற்றது. கோலி ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களையும், டோனி 48 ஓட்டங்களையும் பெற்றனர். இந்திய அணி 5 விக்கெட்களினால் வெற்றி பெற்று தொடரை 2 - 0 என வெற்றி பெற்றது. பந்து வீச்சில் ஜீதன் பட்டேல் 3 விக்கெட்களைக் கைப்பற்றிக்கொண்டார். போட்டி தொடர் நாயகனாக ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவுசெய்யப்பட்ட அதேவேளை விராத் கோலி போட்டியின் நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

கூடுதலான ஓட்டங்களைப் பெற்றவர்கள்
செற்றேஸ்வர் புஜாரா      2    3    216    159       72.00    50.58    1    0
விராத் கோலி                      2    3    212    103    106.00    55.49    1    2
M.S.டோனி                            2    3    183      73       91.50    60.79    0    2   
ரொஸ் ரெய்லர்                  2    4    157    113       39.25    72.68    1    0
விரேந்தர் சேவாக்             2    3    128       47      42.66    95.52    0    0   
ரூகர் வன் வைக்                2    4    115       71      28.75    58.67    0    1
கேன் வில்லியம்சன்        2    4    114       52      28.50    33.92    0    1
(போட்டிகள், இன்னிங்ஸ், ஓட்டங்கள்,கூடுதலான ஓட்டங்கள், சராசரி, ஸ்ரைக் ரேட், சதங்கள் , அரைச் சதங்கள் )

கூடுதலான விக்கெட்களைக் கைப்பற்றியவர்கள்
ரவிச்சந்திரன் அஷ்வின்     2    4    89.2    236    18       31/6     13.11    2.64
பிரக்ஜன் ஓஜா                         2    4    98.1    240    13       99/5    18.46    2.44
ரிம் சௌதி                                1    2    42.0    132      8       64/7     16.50    3.14
ஜீதன் பட்டேல்                        2    3    75.2    246      7    100/4     35.14    3.26
உமேஷ் யாதவ்                       2    4    49.0    214      5      68/2     42.80    4.36
ரென்ட் பெளட்                          2    3    66.5    247      5      93/3     49.40    3.69
(போட்டிகள், இன்னிங்ஸ்,ஓவர்கள், வழங்கிய ஓட்டங்கள், விக்கெட், சிறந்த பந்துவீச்சு, சராசரி, ஓட்ட வேகம்)
"எதிர்கால அணியுடன் தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty