'தேசிய அரசு': எங்கே, எதற்கு, எப்போது?
17-09-2012 05:01 PM
Comments - 1       Views - 962
கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கு பின்னர் தோன்றியுள்ள 'தொங்கு சபை' பிரச்சினைக்கு முடிவு காண, தமிழ் தேசிய கூட்டமைப்பு, அங்கு 'தேசிய அரசு' ஒன்று அமையும் சூழ்நிலை அமைந்தால் அதில் பங்கு பெறுவது குறித்து ஆலோசனை செய்யும் என்று கட்சி தலைவர் சம்பந்தன் அறிவித்திருப்பது கொள்கை ரீதியாக வரவேற்கப்பட வேண்டிய விடயம். அதே சமயம், இது குறித்து கூட்டமைப்போ, பிற கட்சிகளோ தீவிரமாக சிந்தித்துள்ளார்களா? அல்லது இதனை தங்களது அடுத்தகட்ட அரசியல் விளையாட்டில் ஒரு பகடைக்காயாக மட்டுமே பயன்படுத்த விரும்புகிறார்களா என்பது குறித்து தற்போதைக்காகிலும் தெளிவு இல்லை.

கிழக்கு மாகாணசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி பத்து நாட்களுக்கு மேலாகியும் அங்கு அரசு அமைவது குறித்து எந்தவிதமான சமிக்ஞைகள் கூட தெரியவில்லை. அதே சமயம், அங்கு அரசு அமைப்பதில் முஸ்லிம் காங்கிரஸ் முக்கிய பங்குவகிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுபோன்ற தனது முடிவை எடுப்பதில் அந்த கட்சி பல்வேறான எதிர்பார்ப்புகளுக்கும், அந்த எதிர்பார்ப்புகளை பொய்க்காத வண்ணமான வாய்ப்புகளுக்கும், அவற்றிற்கு அப்பாற்சென்று அரசியல் அழுத்தங்களுக்கும் பதில் சொல்ல வேண்டிவரும் என்பதும் தெரிந்தே இருந்தது.

தேர்தலுக்கு பிந்திய காலகட்டத்தில் எழும் கேள்விகளுக்கு பதில் காணும் வழியாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைமை தன்னை முன்னமே கூட தயார்படுத்திக் கொண்டிருக்கும் என்றும் கருதலாம். என்றாலும், எதிர்பார்ப்பு என்பது வேறு, அதனை நேரடியாக சந்திக்கும் நிலைமை வேறு. இந்த குழப்பங்களின் ஒரு பகுதியாகவே 'தேசிய அரசு' அமைக்கும் வாய்ப்பு குறித்து ஹேஷ்யங்களும், கேள்விகளும் தோன்றியுள்ளன என்பதே உண்மை. அவற்றிற்கெல்லாமான பதிலும் கூட முஸ்லிம் காங்கிரஸின் முடிவில் தான் தொங்கியுள்ளது. இது குறித்த எண்ணம் கூட அந்த கட்சியை பொறுத்தவரையில் தற்போது தான் சுமக்கும் அரசியல் அழுத்தங்களில் ஒன்றாகி போய்விட்டது என்பதும் உண்மை.

இன்றைய இலங்கை அரசியல் சூழலில் கிழக்கு மாகாணத்தில் 'தேசிய அரசு' என்ற எண்ணம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. நாடு மற்றும் அதன் மக்கள் குறித்து சிந்திக்காமலே கருத்துக் கூற வேண்டுமென்றால், இதனை வேலைக்கு ஆகாத விடயம் என்று உடனடியாகவே உதாசீனப்படுத்தி விடலாம். என்றாலும், அரசில் பங்குபெறும் வாயப்புள்ள கட்சிகள் அனைத்துமே சிந்தித்து செயல்பட வேண்டிய விடயமும் கூட. குறிப்பாக ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து அரசியல் செய்ய வேண்டிய சூழ்நிலைகள் தோன்றும். நிர்பந்தங்கள் உருவாகும். ஆவற்றை கட்சி தலைமைகள் ஆராய்ந்து, அமைதியுடன் வழி நடத்தினால் அத்தகைய பிரச்சினைகள் ஒன்றும் தீர்க்க முடியாதவை அல்ல.

இலங்கையில் 'தேசிய அரசு' என்ற பேச்சு எழுவது இதுவே முதல் தடவை அல்ல. அவை எவையும் நடைமுறை படுத்தப்படவில்லை என்பது மட்டுமல்ல, அந்தந்த சமயங்களில் அத்தகைய கருத்துக்கள் காணப்படாமல் ஆக்கப்பட்டன. அதே சமயம் மாகாண அளவில் இவ்வாறான கருத்து எழுவது இதுவே முதல் முறையாகும். இந்த கருத்து வெற்றி பெற்றால், அதுவே கூட தேசிய அளவில் அனைத்துக் கட்சி ஆட்சி அமைவதற்காக சாத்தியங்கள் தோன்றலாம்.

இதில் குறிப்பாக, மாகாணத்தில் என்றாலும் சரி, மத்தியில் என்றாலும் சரி, கூட்டமைப்பு அரசில் பங்குபெறுவது என்பது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதிலும் குறிப்பாக, அரசில் செயல்படுவது குறித்து, அமைச்சரவையில் பங்குபெறும் பிற கட்சி தலைவர்களிடம் இருந்தும் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பாலபாடம் படித்துக் கொள்ளலாம். கடந்த பல தசாப்தங்களாக அரசு நடத்துவது எப்படி என்று அறிந்து கொள்ளாமலே அரசியல் செய்து வந்துள்ளனர். இது பிற்காலத்தில், வடக்கு மாகாண அரசியல் மற்றும் அரசிலும், பிறிதொரு காலத்தில் தேசிய அளவிலும் அவர்களுக்கும் அவர்களை சார்ந்திருக்கும் மக்களுக்கும் பயனுள்ளதாகவே அமையும்.

கிழக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழலில், 'தேசிய அரசு' அமைப்பது குறித்து தன்னிடம் மத்திய அரசு தலைவர்கள் சிலர் பேசியுள்ளதாக சம்மந்தன் கூறியுள்ளார். இது குறித்து அரசு சார்ப்பில் பேசுவதற்கு அவர்கள் யாருக்குமே அதிகாரம் இல்லை என்ற வகையில் கருத்து தெரிவித்துள்ள அவர், 'தேசிய அரசு' குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னுடன் உரையாடினால் மட்டுமே அது குறித்து கூட்டமைப்பு சிந்தித்து செயல்பட முடியும் என்றும் சுறியுள்ளார்.

கூட்டமைப்பின் இந்த நிலைப்பாடு எதிர்பார்க்கப்பட வேண்டிய ஒன்றே. கடந்த மாதங்களில் இனப்பிரச்சினை குறித்த இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் அரசு தரப்பு சரியான முறையில் தங்களது நிலைமையை முன்னெடுத்து வைக்கவில்லை என்பது கூட்டமைப்பின் வாதம். இதுபோன்றே, கூட்டமைப்பு குறித்தும் அரசு தரப்பு குறை கூறியிருந்தது. இதில் இரு தரப்பினருமே, அடுத்தவர் தங்களை அவர்களது அரசியல் சுயலாபத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளனர் என்ற வகையிலும் கருத்து கூறினார்கள். வகையில், 'தேசிய அரசு' குறித்து ஒரு சாரார் வெளியிடும் கருத்துக்கள் தங்களை அரசியல் ரீதியான பொறியில் சிக்க வைக்கும் முயற்சி மட்டுமே என்று அடுத்தவர் கருதினால், அது குறித்து மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

அதேசமயம், குறிப்பிட்ட 'தேசிய அரசு' கிழக்கு மாகாணத்தில் மட்டும் தானா, அல்லது அதே சமயம் மத்திய அரசிலும் அந்த முறை செயல்படுத்தப்படுமா என்பது குறித்து எந்தவித கருத்தும் தெரியவில்லை. இன்னும் சொல்லப் போனால், 'தேசிய அரசு' என்ற கரு எந்தவிதத்தில் கிழக்கு மாகாணத்தில் கூட உருவாகும் என்பது குறித்து எந்த விளக்கமும் இதுவரை கேட்கப்படவும் இல்லை, கொடுக்கப்படவும் இல்லை.

குறிப்பாக, இந்த 'தேசிய அரசில்' முஸ்லிம் காங்கிரஸ் சேர்க்கப்பட வேண்டும் என்று அரசு தரப்போ அல்லது கூட்டமைப்போ எதிர்பார்க்கிறதா என்று தெரியவில்லை. அல்லது, 'தேசிய அரசு' என்ற பதத்தையே இரு தரப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ் தங்களது வழிக்கு கொண்டு வருவதற்காக பயன்படுத்தும் கருவியா என்று தெரியவில்லை. அதாவது, அரசு தரப்பும் கூட்டமைப்பும் தனித்தனியாக, தங்களுடன் மட்டும் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி அமைக்கவில்லை என்றால், அந்த கட்சியை பின்னுக்கு தள்ளிவிட்டு தாங்கள் இருவரும் கிழக்கில் கூட்டாட்சி அமைத்து விடுவோம் என்று அதனை மிரட்டுவதாகவும் இதனை கொள்ளலாம்.

இதில், உண்மை எதுவாக இருந்தாலும் அது குறித்து முஸ்லிம் காங்கிரஸ் தவறான முடிவை எட்டிவிடக் கூடாது என்பதில் கூட்டமைப்பு குறிப்பாக தெளிவாக இருக்க வேண்டும். காரணம், கிழக்கு மாகாண தேர்தல் முடிவுகளை ஒட்டி தொடர்ந்து கருத்து கூறி வரும் கூட்டமைப்பு தலைவர்கள், தங்களுடன் அந்த கட்சி அரசு அமைப்பதற்கு அணி சேர்வதே அவர்கள் தங்களது மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் ஒரே வழி என்ற வகையில் பேசி வருகிறார்கள்.

அந்த வகையில், முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒரு நியாயம், கூட்டமைப்பிற்கு ஒரு நியாயம் என்ற வகையில் அவர்களும் செயல்பட கூடாது. அது, முஸ்லிம் மக்களை தமிழ் சமுதாயம் மீண்டும் ஒருமுறை ஏமாற்றி விட்டதாகவே கருதப்படும். இது இரு சமுதாயத்தினருக்கும் நல்லதல்ல. மாறாக, அரசியல் காரணங்களுக்காக மட்டுமே, கூட்டமைப்பு 'தேசிய அரசு' என்ற போர்வையில் மத்தியில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர (ஐமசு) கூட்டணியுடன் கிழக்கு மாகாணத்தில் அரசு அமைக்க விழைந்தால் அவ்வாறே செய்வதில் தவறு ஒன்றும் இல்லை. அதற்கு முன்னர் முஸ்லிம் காங்கிரஸை அவர்கள் விளையாட்டுப் பொருளாகவும் ஆக்கிவிடக் கூடாது.

இவ்வாறெல்லாம் கூறுவதால் மட்டுமே, பிற கட்சிகளின் பங்களிப்புடன் அல்லது தாங்கள் இரு கட்சிகள் மட்டுமே பங்கு பெறும் விதத்தில் ஐமசு கூட்டணியும் தமிழ் கூட்டமைப்பும் கிழக்கு மாகாணத்தில் அரசு அமைத்து விடும் என்று கருத முடியாது. இன்னும் சொல்லப் போனால், இரு தரப்பினருமே தங்களுக்குள்ளேயும், முஸ்லிம் காங்கிரஸுடனும் சேர்ந்து, 'புலி, ஆடு, புல் கட்டு' என்ற விதத்திலேயே அரசியல் விiளாட்டு விளையாடி வருகிறது. அதிலும் குறிப்பாக, அரசு மற்றும் கூட்டமைப்பு தரப்பினரிடையே 'அதிகார பகிர்வு' போன்ற அடிப்படை பிரச்சினைகளில் அடுத்தகட்ட நடைமுறை குறித்து ஒருமித்த கருத்து ஏற்படாமல் இரு தரப்பினரும் கிழக்கிலோ, பின்னர் வடக்கிலோ அரசில் சேர்ந்து செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அது வரவேற்க தக்க விடயமும் இல்லை.

தற்போதைக்கு இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகள், இரு தரப்பு பேச்சுவார்த்தை மற்றும் நாடாளுமன்ற சிறப்பு குழு என்ற இரண்டிற்கும் இடையே ஊசலாடிக் கொண்டு இருக்கிறது. அதற்கப்பால் சென்று, வடக்கு - கிழக்கு இணைப்பு, பொலிஸ் மற்றும் நிலம், நிதி, நிர்வாகம் ஆகியவற்றில் அதிகார பகிர்வு போன்ற தலைப்புகளின் கீழ் முடிவுகள் எடுக்கப்பட வேண்டிய நிiமையிலேயே கடந்த தசாப்தங்களை போலவே இப்போதும் தொங்கு நிலையிலேயே தொடர்கிறது. மேலும், இப்போது கிழக்கில் 'தேசிய அரசு' என்று கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டால், அதுபோன்றே பிற்காலத்தில் வடக்கு மாகாணத்திலும் அந்த முறையை ஏற்றுக்கொள்ள அந்த கட்சி தயாராக இருக்க வேண்டும்.

அதே சமயம், தங்களது அணியில் இருந்து கிழக்கு மாகாண சபையின் ஐந்து உறுப்பினர்களுக்கு அரசு தரப்பு வலைவிரித்து உள்ளது என்றும் கூட்டமைப்பு வெளிப்படையாகவே அறிவித்துள்ளது. இது குறித்த கூட்டமைப்பு தலைமையின் கவலையும் அவர்களை 'தேசிய அரசு' குறித்து சிந்திக்க வைத்திருக்கலாம். ஆனால், கட்சியின் அரசியல் கவலை மட்டுமே 'தேசிய அரசு' அமைவதற்கு அடித்தளம் அமைத்து விடமுடியாது. மிஞ்சிமிஞ்சி போனால், அது ஒரு தொடக்கம் மட்டுமாகவே இருக்க முடியும்.

'தேசிய அரசு' என்ற பேச்சு எழுந்தவுடனேயே, அதில் ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு எதுவாக இருக்க முடியம் என்ற கேள்வியும் உடன் எழுகிறது. அதனை ஒட்டி, அவ்வாறான ஒரு 'தேசிய அரசில்' பங்கு வகிக்க அந்த கட்சிக்கு அழைப்பு விடப்படுமா என்பன போன்ற கேள்விகளும் உடன் எழுவது தவிர்க்க முடியாதது. அதுபோன்றே அவ்வாறு அழைப்பு விடப்பட்டால், அது குறித்த கட்சியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதும் யூகத்திற்கே விடப்பட வேண்டிய கட்டத்திலேயே உள்ளது. என்றாலும், அவ்வாறு கிழக்கு மாகாணத்தில் அரசு அமையும் பட்சத்தில், தமிழ் மற்றும் முஸ்லிம் இனத்தவர் தலா இரண்டு ஆண்டுகளும், சிங்களவர் ஓர் ஆண்டும் முதலமைச்சர் பதவி வகிக்கும் வகையில் முடிவு எட்டப்பட வேண்டும் என்ற அந்த கட்சியின் நிலை கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

இடைப்பட்ட காலத்தில், சிங்கள கட்சிகளுடன் 'தேசிய அரசு' அமைப்பது குறித்து சரியான முறையில் அழைப்பு வந்தால் அதனை கூட்டமைப்பு ஆராயும் என்று அறிவித்ததன் மூலம், கட்சி தலைவர் சம்பந்தன் தமிழ் மக்கள் சரியான பாதையில் வழி நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டு காட்டியுள்ளார். அவரது 'மட்டக்களப்பு பேருரை' ஏற்படுத்திய சலசலப்பு அடங்கி, கூட்டமைப்பு இலங்கை தேசியத்திற்கும் சிங்கள அரசியல் தலைமைகளுக்கும் எதிரானதல்ல என்ற எண்ணம் உருவாக கட்சியின் தற்போதைய நிலைப்பாடு வழி ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மட்டுமே கிழக்கு மாகாணத்தில் 'தேசிய அரசு' உருவாகிறதோ இல்லையோ, இலங்கை தேசியத்திற்கும் சிங்கள அரசியல் கட்சிகளுக்கும் கூட்டமைப்பும், அது சார்ந்திருக்கும் தமிழ் சமூகமும் எதிரி அல்ல என்ற கருத்து மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுவே, எல்லா வகைகளிலும் அனைவருக்கும் கிடைத்த முதல் வெற்றி எனலாம்!
"'தேசிய அரசு': எங்கே, எதற்கு, எப்போது?" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (1)
குமார் 17-09-2012 03:18 PM
கூட்டமைப்பு அரசில் பங்குபெறுவது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்குமா ?. ஐயா கிருஷ்ணமூர்த்தி!. கூட்டமைப்புக்கு பெருவாரியாக தமிழர்கள் வாக்களித்தது அரசில் பங்குபெறவல்ல. அந்த அளவிற்கு தமிழர்கள் மானம் இல்லாதவர்கள் அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty