சிறுபான்மையினங்களுக்கு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் கொடுத்த பரிசு
20-09-2012 01:07 PM
Comments - 2       Views - 1154
                                                                                             -கே.சஞ்சயன்

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிந்து, கிட்டத்தட்ட 12 நாட்களாக நீடித்த இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.

கிழக்கில் எப்பாடுபட்டாவது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆட்சி அமைக்கும் என்பதும், அதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு கொடுக்கும் என்பதும், தேர்தல் முடிந்தவுடனேயே தெளிவாகி விட்டது.

ஆனாலும் கிழக்கில் முதலாவது முஸ்லிம் முதல்வர் பதவியேற்பதற்கு கிட்டத்தட்ட 12 நாட்களாகின. கிழக்கில் முஸ்லிம் ஒருவர் முதல்வராக வேண்டும் என்ற முஸ்லிம்களின் கனவு, முஸ்லிம் கட்சிகளின் மூலமாகவன்றி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூலமே நிறைவேறியுள்ளது.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளின் பலவீனங்களை நன்றாகவே வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் நடந்து முடிந்த தேர்தலை, தமிழ்நாட்டில் தேர்தலுடன் ஒப்பிட்டுக் கூறலாம்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியால் தனித்துப் போட்டியிட்டால், ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற முடியாது. அதனால் தான் காலத்துக்குக் காலம் திமுக அல்லது அதிமுகவின் முதுகில் ஏறி வசதியாக அமர்ந்து கொண்டு சவாரி செய்வது வழக்கம்.

காலத்துக்கு ஏற்றவாறு, யாருக்கு கூடுதல் பலம், செல்வாக்கு உள்ளதோ அந்தப் பக்கம் ஏறி அமர்ந்து கொள்ளும் காங்கிரஸ். இப்படித்தான், காங்கிரஸ் இந்தியத் தேசியத்தை தமிழ்நாட்டில் கட்டிக்காக்கிறது.

அதுபோலத் தான், கிழக்கில் நடந்த தேர்தலிலும், தமிழ், முஸ்லிம் கட்சிகளின் முதுகில் சவாரி செய்து வெற்றி பெற்றுள்ளது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு கிடைத்த 14 ஆசனங்களில், 7 ஆசனங்கள் தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்குரியவை.

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸும், தேசிய காங்கிரசும் தலா 3 ஆசனங்களையும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஒரு ஆசனத்தையும் வென்றிருந்தன.

மீதமுள்ள இரண்டு போனஸ் ஆசனங்கள் உள்ளிட்ட 7 ஆசனங்கள் தான், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு உரியது.

ஆனாலும் கிழக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் தெரிவான ஒருவரே முதல்வராகத் தெரிவாகியுள்ளார். 37 ஆசனங்களைக் கொண்ட கிழக்கு மாகாணசபையில், வெறும் 7 ஆசனங்களை வென்ற ஒரு கட்சி முதல்வர் பதவியை கொத்திக் கொண்டு போயுள்ளது.

இதற்குக் காரணம், தமிழ், முஸ்லிம் கட்சிகளிடையே உள்ள முரண்பாடுகள் தான் என்பதில் சந்தேகமில்லை. முதல்வர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்குக் கொடுப்பதை தேசிய காங்கிரசும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸும் எதிர்த்தன.

அதேவேளை, இந்த இருகட்சிகளும் முதல்வர் பதவிக்கு முன்நிறுத்திய அமீர் அலியை ஏற்றுக் கொள்ள முஸ்லிம் காங்கிரஸ் மறுத்தது.

கிழக்கில் முஸ்லிம் முதல்வர் ஒருவரை நியமிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வந்த போதும் அவர்களின் ஆதரவைப் புறக்கணித்தது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.

கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவரே, முதல்வராவார் என்று அடித்துக் கூறிய ரவூப் ஹக்கீம் கடைசியில், நஜீப் ஏ மஜீத்தை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்தார்.

இந்தளவுக்கும், அரசுடன் எத்தகைய சூழலில் இணக்கப்பாடு ஏற்பட்டது என்பதை முஸ்லிம் காங்கிரஸ் விபரிக்கவில்லை.  மத்திய அரசில் அங்கம் வகிக்க வேண்டும் என்பதே,  முஸ்லிம் காங்கிரஸின் குறியாக இருந்ததேயன்றி, கிழக்கில் முதல்வர் பதவியைப் தமது கட்சி பெறவேண்டும் என்பதில் விடாப்பிடியான கொள்கையைக் கடைப்பிடிக்கவில்லை.

தமது கட்சிக்கு முதல்வர் பதவியைப் பெற வேண்டும் என்பதில் ஹக்கீம், உறுதியாக இருந்திருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொடுத்த கையை பற்றியிருக்கலாம்.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழைப்பை முஸ்லிம் காங்கிரஸ் செவிமடுக்கவில்லை என்பதே உண்மை.

கடைசி நேரத்தில் கூட, ஏனோ தானோ என்று தான் ஒரு சந்திப்பையும் நடத்தியது. அரசியலில் இதெல்லாம் சகஜம் தான். அதிகாரமுள்ள பக்கம் அரசியல்வாதிகளும் கட்சிகளும் சாய்வது இயல்பே.

அந்தவகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொடுத்த கையை உதறிவிட்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒதுங்கிக் கொண்டது எதிர்பார்க்காத ஒன்றல்ல.

இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏமாற்றமளிக்கும் ஒன்றாகவும் இருக்கமுடியாது. ஏனென்றால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கடந்தகால வரலாறு அப்படி.

அதேவேளை, இந்தத் தேர்தலுக்குப் பின்னர் முஸ்லிம் காங்கிரஸை கவிழ்ப்பதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை  விலைக்கு வாங்க ஆளுங்கட்சி முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் விலை போகாமல் இருந்து கொண்டதால், தான், முஸ்லிம் காங்கிரஸால் இன்று அரசுடன் பேரம் பேச முடிந்தது.

கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் இணைந்து செயற்பட்டால் தான், பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும்.

அந்த உண்மை முஸ்லிம் தலைமைகள் புரிந்து கொண்டாலும், தமிழர்களுடன் இணைந்து அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு தயாராக இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

கடந்த காலங்களில் பேச்சுக்கள் நடத்தப்பட்ட போதெல்லாம், அரசதரப்பில் இருந்து கொண்டே,  தமக்கும் பேச்சில் பங்கு கேட்டு தமிழர் தரப்பிடம் அடம்பிடித்த முஸ்லிம் தலைமைகள், இப்போது தமிழ் மக்களுடன் இணைந்து அதிகாரத்தைப் பகிரத் தயாராக இல்லை என்பதை உறுதி செய்துள்ளன.

இன்னொரு புறத்தில், என்னதான் அரசாங்கம் உள்ளகத் தீர்வு ஒன்று பற்றி உபதேசம் செய்தாலும், அது ஒன்றும் தானாகக் கனியும் பழமாக இல்லை என்பதே உண்மை.

சர்வதேச தலையீடுகளின் மூலம்- அழுத்தங்களின் மூலம் ஒரு தீர்வுக்கான சூழலை ஏற்படுத்தலாம் என்று தமிழர்தரப்பு உறுதியாக நம்புகிறது.

இத்தகைய சூழ்நிலையில், கிழக்கில் ஆட்சியதிகாரத்தை தமிழர் தரப்புடன் பகிர்ந்து கொள்ள விரும்பாத, முஸ்லிம் தலைமை எதிர்காலத்தில் உள்ளக அல்லது சர்வதேச தலையீட்டுடனான ஒரு தீர்வு முயற்சியின் போது சங்கடங்களை எதிர்கொள்ளலாம்.

முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் உறுதியை பெற்ற பின்னரே, எந்தத் தரப்புக்காவது கிழக்கில் ஆட்சியமைக்க ஆதரவு கொடுப்போம் என்று கூறியது முஸ்லிம் காங்கிரஸ்.

இந்தநிலையில், தற்போது அந்தக்கட்சி தமது வழியிலேயே, அரசுடன் இணைந்தோ பேசியோ முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்போகிறதா?

அல்லது தமிழர் பிரச்சினைக்கான பொதுவான அரசியல்தீர்வுக்கான முயற்சிகளில் தான் தங்கியிருக்கப் போகிறதா? என்பது முக்கியமான கேள்வி.

ஏனென்றால், ஆட்சிக்கு அவர்கள், உரிமைப் பிரச்சினைக்கு நாங்களா என்று நாளை தமிழர் தரப்பு ஒரு கேள்வியை எழுப்பக் கூடும். அரசியலில் இரண்டு விடயங்கள் உள்ளன.

ஒன்று, எப்போதும், எத்தகைய சூழலிலும் அதிகாரத்துக்கும், பதவிகளுக்குமே முன்னுரிமை கொடுப்பது. இரண்டாவது, கொள்கைக்கும் தமக்கு வாக்களித்த மக்களின் மனஉணர்வுகளுக்கும் மதிப்பளிப்பது. இந்த இரண்டு இயல்புகளும் ஒன்றிணைய முடியாதவை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரையில், பல சமயங்களில் இணைந்து போட்டியிட்ட கட்சிகளை  கைவிட்டு அதிகாரத்தின் பக்கம் சாய்ந்த வரலாறே அதிகம்.

இத்தகைய வரலாற்றை துடைத்தெறியும், ஒரு களமாக கிழக்கு அரசியல் களத்தை அது பயன்படுத்தத் தவறிவிட்டது. இப்போது முதல்வர் பதவியை கூட, ஏனைய முஸ்லிம் கட்சிகளுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இல்லாத அளவுக்கு முஸ்லிம் தலைமைகள் உள்ளன.

இத்தகைய நிலையில், தமிழர் தரப்புடன் இணைந்து செயற்படுவது முஸ்லிம் காங்கிரஸுக்கு சிரமமானது தான். மூன்று முஸ்லிம் கட்சிகளும் விட்டுக்கொடுப்புடன் நடந்து கொண்டிருந்தால், தமக்கிடையே முதல்வர்  பதவியைப் பங்கு போட்டிருக்க முடியும்.

ஆனால் குரங்கின் கையில் கிடைத்த அப்பமாக, அது இப்போது தேசியக் கட்சியின் கையில் போயுள்ளது.

கிழக்கில் சிறுபான்மையின,  இனத்துவக் கட்சிகளே பெருமளவு வாக்குகளைப் பெற்றிருந்த போதும் தேசியக் கட்சி முதல்வர் பதவியை அள்ளிக் கொண்டு போனதற்குக் காரணம் ஒற்றுமையின்மையே.

இது தமிழ், முஸ்லிம் இனங்களின் பெயரால், அவற்றின் நலன்களை முன்னிறுத்தி அரசியல் செய்யும் கட்சிகளுக்குக் கிடைத்த  மிகப்பெரிய தோல்வியாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட, இனத்துவக் கட்சிகளால் 25 ஆசனங்களைப் பெற்ற போதிலும், அவர்களால் ஒரு முதல்வர் பதவியைக் கூடப் பிடிக்க முடியாது போனது.

இது தான்  சிறுபான்மையினங்களுக்கு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் கொடுத்த பரிசு.

கிழக்கில், ஆட்சியமைக்க முடியாது போனது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வருத்தமளிக்கலாம் என்று கூறியுள்ள ரவூப் ஹக்கீம் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கும் பாடுபடுவோம் என்று பெருந்தன்மையோடு கூறியிருப்பது தான்  வேடிக்கை.

ஏனென்றால் முஸ்லிம்களின் அபிலாசைகளையே நிறைவேற்ற முடியாத முஸ்லிம் தலைமைகள், தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றப் போவதாக கூறியுள்ளதைப் பார்க்கும் போது, 'கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானத்தில் ஏறி வைகுண்டம் போனானாம்' என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.

" சிறுபான்மையினங்களுக்கு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் கொடுத்த பரிசு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (2)
Mohammed Hiraz 20-09-2012 01:00 PM
தமிழ் அரசியல்வாதிகளுடன் முஸ்லிம் காங்கிரஸ் சேராததற்கு முக்கிய காரணம் தமிழ் அரசியல்வாதிகள் இன்னும் கிஞ்சித்தும் முஸ்லிம்களின் அரசியல் உரிமை பற்றி புரிந்துகொள்ளாமலும் தங்களை போன்றே முஸ்லிம்களும் யாரோடும் எவரோடும் அரசியல் செய்யும் உரிமை உள்ளவர்கள் என்பதை விளங்கி கொள்ளவோ புரிந்துகொள்ளவோ ஜீரணிக்கவோ இயலாமல் இருப்பதே. அமெரிக்காவுடன் கூட்டமைப்பு கொஞ்சி குலாவலாம் எனில் முஸ்லிம்கள் தாங்கள் விரும்பிய தரப்போடு கொஞ்சி குலாவும் உரிமை உடையோரே??? கூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சி அமைபோம் என முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலில் பகிரங்கமாக கூறி இருந்தால் அந்த கட்சி மக்களிடம் பெற்ற வெறுப்பை மிக தெளிவாக உணர முடிந்திருக்கலாம்.
Reply .
3
8
சர்வசித்தன் 22-09-2012 01:06 PM
சென்ற‌ மூன்று தசாப்தங்களாகத் தொடர்ந்த போரினால் அவர்கள் தமிழர்கள் மீது பகைமை கொள்ளும் நிலை ஏற்பட்டுவிட்டது. கிழக்கிலங்கையில் நிகழ்ந்த அரசியல் ‘விளையாட்டு’ எதிர்பார்க்கப்பட்டதே. ஆனால், அரசாங்கத்தைக் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்து, அதன் மூலம் பெற்ற வாக்குகளை மீண்டும் அந்த அரசுக்கு வழங்கும் செயலை அவர்களுக்கு வாக்களித்ததவர்களே ஏற்றுக்கொள்வது சிரமம்!
ஒருவகையில் இது அவர்களுக்குச் செய்த நம்பிக்கைத் துரோகம். 'அரசியலில் நம்பிக்கையாவது, துரோகமாவது' என நினைத்தால் இதனை விமர்சிக்க வேண்டியதில்லை.
Reply .
1
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty