மோகன்லாலுக்கு பொலிஸார் வலைவீச்சு...
15-06-2012 12:49 PM
Comments - 0       Views - 1086

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்பவர் நடிகர் மோகன்லால். தமிழில் அரண், இருவர், பொப் கோர்ன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் தனி முத்திரைப் படைத்தவர்.

இந்நிலையில், புதிய பிரச்சினையொன்றில் மாட்டிக்கொண்டுள்ளார் மோகன்லால். இவரது வீட்டிலிருந்து யானைத் தந்தங்கள் சிலவற்றை மீட்டுள்ள கேரள வனவளத்துறை அதிகாரிகள் மோகன்லால் மீது வழக்குத் தாக்கல் செய்துள்ளதுடன் அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

மோகன்லாலுக்குச் சொந்தமான எர்ணாகுளம், திருவனந்தபுரம், சென்னை ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள வீடுகளில் கடந்த ஆண்டு சோதனைகளை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள், மோகன்லால் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களைக் குவித்து வைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.

மேலும் எர்ணாகுளத்தில் உள்ள அவருடைய வீட்டிலிருந்து இரண்டு யானை தந்தங்களும் கைப்பற்றப்பட்டன. வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பல மாதங்களான நிலையில், அவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட தந்தங்கள் குறித்தோ, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்தோ எந்த விசாரணையும் நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில் மோகன்லால் வீட்டில் கைப்பற்றிய தந்தங்கள் உண்மையான தந்தங்களா? எனக் கேட்டு தகவல் உரிமை ஆணைக்குழுவில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த அனில்குமார் என்பவர் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

இதற்கு பதிலளித்த கேரள வனவளத்துறை அதிகாரிகள், மோகன்லால் வீட்டில் கைப்பற்றப்பட்டது உண்மையான தந்தங்கள் தான் என்றும், அதை வைத்திருக்க அவர் அனுமதிப்பத்திரம் எதுவும் பெற்றிருக்கவில்லை என்றும் அறிவித்துள்ளனர். 

இது தொடர்பாக மோகன்லாலிடம் விசாரணை நடத்தும்படி கேரள பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதனையடுத்து மோகன்லாலிடம் விசாரணை நடத்தவதற்காக அவரது வீட்டுக்கு பொலிஸார் சென்றுள்ளனர். இருப்பினும் படப்பிடிப்புக்காக அவர் வெளியூர் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, முறையான அனுமதி இன்றி யானைத் தந்தங்கள் வைத்திருந்ததாக மோகன்லால் மீது கொடநாடு வனவளத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து மோகன்லால் கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது.
"மோகன்லாலுக்கு பொலிஸார் வலைவீச்சு... " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty